விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம், கிலவம்பூண்டி கிராமத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை மற்றும் முருகன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மேல்மலையனூர் பகுதியில் உள்ள ஊர்களில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது, கிழவம்பூண்டி கிராமத்தில் உள்ள மல்லியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.
கொற்றவை சிற்பம் :
அப்போது,அவ்வூரின் வடக்கு எல்லையில் பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள இக்கோயிலைச் சமீபத்தில் சீரமைத்துப் புனரமைப்பு செய்து சிறப்பாக வழிபாடு செய்து வருவதாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். அங்குள்ள சுமார் 5 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் "மல்லியம்மன்" என்ற பெயரில் உள்ள மூலவர் சிற்பம் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாகக் காட்சி தருகிறது.
சிற்பத்தின் தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்க , வட்ட முகத்தில், இருகாதுகளிலும் மகர குண்டலமும், கழுத்தில் புலிப் பல் தாலியும் மார்பு கச்சையும் அணிந்தும், தோல் மற்றும் கைகளிலும் வளைகள் அணிந்தும் காட்சி தருகிறது இச்சிற்பம்.
மேலும்,மேல் வலது கரத்தில் பிரயோக சக்கரமும், வலது கரங்களில் வாள் , மான் கொம்பு , மணி ஏந்தியபடி உள்ளது. மேல் இடது கரம் சங்கு தாங்கியும், மற்றொரு கைகள் வில் , கேடயமும் ஏந்தி கீழ் இடது கரம் இடையின் மீது ஊரு முத்திரையிலும் காட்சி தருகிறது.
சிற்பத்தின் பிரதிபலிப்பு ,அணிகலன்கள் மற்றும் சிற்ப அமைதியை வைத்து பார்க்கும் பொழுது, இச்சிற்பம் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவையாகக் கருதலாம் என்கிறார்கள்.
தவ்வை சிற்பம் :
மேலும் இவ்வூரை அடுத்து உள்ள மேல்நெமிலியில் அம்மச்சார் அம்மன் கோயிலில் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாகத் தவ்வையும் அதன் அருகே வயல்வெளியில் சிவலிங்கம் மற்றும் முருகர் சிற்பமும் காணப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
தலையில் கரண்ட மகுடம் தரித்துப் பருத்த இடையுடன் அமர்ந்த கோலத்தில், வலது கை அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும் இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும் அழகுறத் தவ்வை வடிக்கப்பட்டுள்ளது. பல்லவர் கலைபாணியில் உள்ள
இச்சிற்பம் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
இத்தவ்வையின் அருகே 2 அடி பலகை கல்லில் 8 பேர் வரிசையாக நின்ற கோலத்தில் ஒரு சிற்பம் உள்ளது. நடுவில் ஆணும் இருபுறம் பெண்களும் உள்ள இச்சிற்பம் என்ன சிற்பம் என்று அறிய முடியவில்லை.
முருகர் சிற்பம்:
இக்கோயிலுக்கு அருகே உள்ள வயல்வெளியில் 3 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் தாமரை மலர் மீது பத்மாசன கோலத்தில் அமர்ந்த நிலையில் முருகர் சிற்பம் காணப்படுகிறது.
தலையைத் தடித்த ஜடாபாரம் அலங்கரிக்க , வட்ட முகத்தில் தடித்த உதடுகளும் , பெரிய விழிகளுடன் இருகாதுகளிலும் பத்ர குண்டலமும் கழுத்தில் சவடி போன்ற ஆபரணமும் தரித்து வலது கையை நெஞ்சருகே வைத்து அம்மாலையை பிடித்தவாரு தனது இடது கையை தொடை மீது வைத்து கம்பீரமாகக் காட்சி தருகிறார். இது போன்ற முருகர் சிற்பம் காண்பது மிக அரிது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
இந்த அனைத்துச் சிற்பங்களின் அமைப்பு மற்றும் அணிகலன்கள் வைத்து பார்க்கையில் 8 ம் நூற்றாண்டு சிற்பமாக இருக்கலாம் என அறியப்படுகிறது. இதன் மூலம் கி.பி 8ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சியின் கீழ் இப்பகுதி செழிப்புற்று இருந்தமையை அறிய முடிகிறது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் பன்னீர்செல்வம்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.