விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் நள்ளிரவு நேரங்களில் நடக்கும் விபத்துகளைத் தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை அளித்து களைப்பு நீக்கும் சேவைப் பணியில் விழுப்புரம் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில் இருந்து சென்னை, திருச்சி, புதுச்சேரி பகுதிகளுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் இரவு நேரத்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்களின் சோர்வு காரணமாக தொடர் விபத்து ஏற்படுகிறது.
இதை தடுக்கும் விதத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், விழுப்புரம் காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், இரவு ரோந்து காவல் துறையினர் அடங்கிய குழுவினர் இந்த சென்னை, திருச்சி, புதுச்சேரி பகுதிகளுக்கு செல்லும் நான்கு சுங்கச்சாவடிகளிலும் இரவு நேரங்களில் கடக்கும் கனரக மற்றும் இலகுரக வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு டீ மற்றும் குடிநீர் வழங்கி போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர், குமாரராஜா கூறுகையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் நாங்கள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதாவது, ஓட்டுநர்களுக்கு சோர்வு ஏற்படும் போது வாகனத்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்னர் செல்ல வேண்டும்.
இதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும் என்றும், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை மனதில் கொண்டு பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்றும், ஓட்டுநர்கள் தங்களுடைய சீருடைகளை அணிந்து கொண்டு, வாகனத்தில் எந்த அளவிற்கு எடை ஏற்றி செல்ல வேண்டுமோ அதனை சரியாக பின்பற்ற வேண்டும் எனவும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியும், அறிவுரை வழங்கியும் அவர்களை அனுப்பி வைக்கின்றோம்.
மேலும், இந்த அணுகுமுறை ஓட்டுநர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஒரு நட்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது என கூறினார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.