விழுப்புரம் அடுத்து 15 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமம் தான் கப்பூர் என்ற கிராமம். இங்கு 11 வது நூற்றாண்டை சேர்ந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான மற்றும் தொன்மையான ஸ்ரீ செய்தருளீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். சிறிய கோவிலாக இருந்தாலும் மிக சிறப்பு மற்றும் பெருமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது . இக்கோயில் பல்லவர் காலத்திலும் சிறப்பு பெற்ற கோயிலாகும்.
மேலும் இக்கோயிலை பற்றி தொல்லியல்ஆய்வாளரான ரமேஷ் கூறுகையில் இக்கோயிலின் அடித்தளம் கருங்கற்களாலும், அதன்மேல் செங்கற்களை கொண்டு இந்த கோவிலின் அமைப்பு இருக்கிறது. இந்த கோவில் முழுக்க செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயிலில் 2 பல்லவர் காலத்து விஷ்ணு சிற்பங்களும், அதன் எதிரே விநாயகர் சிற்பமும், மேலும் தமிழ்நாட்டில் அரிதான சிற்பங்களில் ஒன்றான லகுலீஸ்வரர் சிற்பமும் காணப்படுகிறது. இந்த சிற்பங்கள் முழுக்க பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விஷ்ணு சிற்பங்கள் பலகை கல்லில் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் சங்கும், மறு கையில் சக்கரமும் ஏந்தியபடி இந்த சிற்பம் காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகான சிற்பம் ஆகும்.
மேலும் கோவிலின் அடித்தளத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அந்த கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் கப்பூர் என்றும், இங்கு உள்ள மூலவர் பெயர் செய்தருள நாயனார் என்றும், மேலும் இந்த கோயிலை நிர்வாகம் செய்த பிராணியன்என்பவன் சந்தி விளக்கு எரிப்பதற்கு மூன்று பசுக்களை தானமாக கொடுத்துள்ளார் என்றும் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சிற்பங்கள் மட்டும் கல்வெட்டுகள் என பல நிறைந்துள்ள கோயில் தற்போது கேட்பாரின்றி சிதலமடைந்து பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. இது போன்ற பழமை வாய்ந்த கோவில்களை பாதுகாக்க வேண்டும் என தொழில் ஆய்வாளர் கூறியுள்ளார்.
மேலும் இக்கோயிலைப் பற்றி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கூறுகையில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்கி வருகிறது. தற்போது இக்கோயிலுக்கு என ஒதுக்கப்படும் நிதியை வழங்கினால், இந்த கோயிலை மறுபடியும் பராமரித்து பொது மக்கள் வழிபடுவதற்கு நடைமுறைப்படுத்தலாம் என பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.