ஹோம் /Local News /

திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் - எம்.ஜி.ஆர், காமராசர் சுவைத்த ஃபேமஸ் நெய் ரோஸ்ட்

திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் - எம்.ஜி.ஆர், காமராசர் சுவைத்த ஃபேமஸ் நெய் ரோஸ்ட்

பார்த்தசாரதி ஹோட்டல் நெய் ரோஸ்ட்.

பார்த்தசாரதி ஹோட்டல் நெய் ரோஸ்ட்.

Thiruvanaikaval Parthasarathy Vilas Ghee Roast: திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் நெய் ரோஸ்ட்- இதோ இந்தப் படத்திலிருப்பதுதான் புகழ் பெற்ற அந்த நெய் ரோஸ்ட்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் நெய் ரோஸ்ட்- இதோ இந்தப் படத்திலிருப்பதுதான் புகழ் பெற்ற அந்த நெய் ரோஸ்ட்.

திருச்சியில் ஏராளாமான உணவகங்கள் இருந்தாலும் பார்த்தசாரதி ஹோட்டல்னா தெரியாதவங்களே இருக்க முடியாது..

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வழியாகச் செல்லும் பஸ்சில் ஏறி காவேரி பாலத்தை கடந்து திருவானைக்காவல் ஸ்டாப்ல இறங்கி பார்த்தசாரதி ஹோட்டல் எங்க இருக்குனு கேட்டா, சூப்பர் ஸ்டார் பாணியில் சின்னக் குழந்தையும் சொல்லும்.

இந்த ஊரில் புகழ்பெற்ற ஒரு ஹோட்டல்தான் பார்த்தசாரதி விலாஸ் என்ற ஹோட்டல் ஆகும். 80 வருட பாரம்பரியம் நிறைந்த அந்தக்கால ஹோட்டல் இதுவாகும். திருவானைக்காவல் கோபுரத்தின் மேல விபூதி பிரகாரத்தின் அருகில் உள்ளது இந்த ஹோட்டல்.

அந்த காலத்தில் திருச்சி வரும் முக்கிய நபர்கள். இந்த கடையின் நெய் ரோஸ்ட்டை தான் விரும்பி சாப்பிடுவார்களாம். எம்.ஜி.ஆர், காமராசர் போன்றோரும் திருச்சி வரும்போது இந்த கடையின் நெய் ரோஸ்ட்டை விரும்பி சாப்பிடுவார்களாம்.

இந்த கடையில் நெய் ரோஸ்ட்டை சூப்பர் என்றுதான் அழைக்கிறார்கள். 80 ஆண்டுகளாக ஒரே பக்குவத்தில் தான் நெய்ரோஸ்ட்டை தயாரிக்கின்றனர். நான்கு பங்கு புழுங்கல் அரிசிக்கு ஒரு பங்கு உருட்டு உளுந்து இந்தக் கலவை. கையில் அள்ளினால் மாவு வழியாமல் அதே பதத்தில் தோசைகல்லில் தோசை வார்க்கப்படுகிறது .

தோசையில் வட்டவட்டமாக கோடுகள் தெரிவது இந்த தோசையின் சிறப்பு. எல்லா தோசைகளிலும் இப்படி அதிக கோடுகள் வராதாம். தோசை வேக போகும் நேரத்தில்தான் நெய்யை பக்குவமாக ஊற்றுகின்றனர். சுத்தமான வெண்ணெய் வாங்கி அதை உருக்கி நெய்யாக மாற்றி அந்த நெய்யை மட்டுமே பயன்படுத்துகின்றனர். எல்லா நெய்களையும் இவர்கள் பயன்படுத்துவதில்லை.

சூப்பர் என்று அழைக்கப்படும் இந்த நெய் தோசையை சூடாக சட்னி, சாம்பார் காரசட்னியுடன் சாப்பிடுவது அலாதி சுகம். தமிழ்நாடு தழுவிய அளவில் புகழ்பெற்றது இந்த ஹோட்டல். நீங்கள் திருச்சி சென்றால் இந்த கடையில் நெய்ரோஸ்ட்டை சுவைக்காமல் வராதீர்கள்.

போனமா நெய் ரோஸ்ட் ஆர்டர் பண்ணினோமா சாம்பாரை ஊத்தி கலந்து சட்னி தொட்டு உள்ள தள்ளினோமாங்கறதெல்லம் ரசனை இல்லாதவங்க பண்ற வேல. ஒவ்வொண்ணுக்கும் ஒரு சாங்கியம் இருக்கில்ல! அதத அப்பப்ப பண்ணணும்.

இதோ டேபிள் மேல தோசை வந்திடுச்சி.மொதல்ல அதை ஆசையோடப் பாத்து பார்வையில நம்ம காதல வெளிப்படுத்தணும்.அப்புறம் ரோஸ்ட்லேர்ந்து சூடா புகை வருதில்ல,அந்த வாசனையை மூச்சுக்கு உள்ளிழுத்து நெஞ்சுல நிரப்பி ரசிக்கணும்.இதோ சர்வர் வந்து சாம்பார் கராண்டியை தோசைமேல ஒரு அழுத்து அழுத்தி சாம்பாரை ரோஸ்டுல கவுக்கறார்.அது பாட்டுக்கு கொஞ்ச நேரம் ஊறட்டும்.இதெல்லாம் எப்பிடின்னா கச்சேரிக்கு முன்னாடி ஆலாபனை பண்றாங்கல்ல?'ததரீன்ன'ன்னு அது மாதிரி. தங்கக் கலர்ல ஓரத்துல மொறு மொறுன்னு இருக்கில்ல அதை நறுக்குன்னு உடைச்சு வாய்ல போட்டு கரைய விடணும். அப்புறம் இன்னொரு ஓரத்துலேர்ந்து ஒரு விரல் எடுத்து தேங்காய்ச் சட்னியை அதக்கி வாய்ல போடணும்.

இப்பத்தான் நடுப்பகுதிக்கு வரணும்.ரோஸ்ட் சாம்பார்ல ஊறியும் ஊறாமலும் ஜிர்னு இருக்கும் பாருங்க அதை வாயில போட்டு ரசிச்சு முழுங்கணும்.ஒரு வழியா தோசையை முடிச்சாச்சு.இருங்க இருங்க.அதுக்குள்ள கை கழுவப் போய்டாதீங்க.

கச்சேரியில் துக்கடான்னு ஒண்ணு பாடுவாங்க.ஆலாபனை ஸ்வரமெல்லாம் இல்லை. அதுதான் கச்சேரியின் க்ளைமேக்ஸ். நம்ம கச்சேரில துக்கடா பில்டர் காபிதான். வாயில அந்த சாம்பார் சுவை இருக்கும் போதே சக்கரை கொஞ்சமா போட்ட ஸ்ட்ராங் காபியை உறிஞ்சணும். டிகாக்ஷன் மணமும் அந்த வறுத்த கசப்பும் மெலிதான இனிப்பும் சொர்க்கத்தின் வாசற்படிகள்.

கடைசி சொட்டு காப்பியை உறிஞ்சுவதுடன் கச்சேரி முடியும்.

அடுத்த தடவை ரோஸ்ட் சாப்பிடும்போது இது மாதிரி சாப்பிடுங்க. வாழ்க்கையை ரசிங்க பாஸ்.

திருச்சி - செய்தியாளர் என்.மணிகண்டன்.

First published:

Tags: Trichy