மதுரை மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியை முன்னிட்டு வைகை அணையில் இருந்து ஆறு நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா :-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது . மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும் .
இந்த நிகழ்ச்சிக்காக தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் . தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் போதுமான நீர் இருக்கும் பட்சத்தில் மதுரை சித்திரை திருவிழாவிற்காக தண்ணீர் திறக்கப்படும்.
கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. வருகிற 16-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
தண்ணீர் திறப்பு :-
வைகை அணையில் கடந்த 9 மாதங்களாக நீர்மட்டம் முழுக்கொள்ளளவில் உள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் விழாவை முன்னிட்டு வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்தால், நேற்று முதல் 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவுப்படி நேற்று (11/4/22) மாலை 6 மணிக்கு வைகை அணையில் இருந்து மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது . மொத்தம் ஆறு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் முதல் இரண்டு நாட்களுக்கு 750 கன அடி தண்ணீர் வீதமும், அதற்கு அடுத்த நாட்களில் படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்படும். மொத்தம் மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.