வைகை அணையிலிருந்து 80 நாட்களுக்கும் மேல் 58 ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதால், உசிலம்பட்டியை சுற்றியுள்ள 58 கிராம பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பத் தொடங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐம்பத்தி எட்டாம் கால்வாய் :-
தேனி மாவட்டத்தில் உள்ளது மிகவும் புகழ்பெற்ற வைகை அணை. வைகை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணையில் நீரை தேக்கி மதுரை, திண்டுக்கல் உட்பட 5 மாவட்ட மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கட்டப்பட்டதே இந்த வைகை அணை. இந்த நிலையில் உசிலம்பட்டியை சுற்றி உள்ள பல கிராமங்களுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது 58 கால்வாய் திட்டம். இந்த 58ம் கால்வாய் மூலம் உசிலம்பட்டியை சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி, அப்பகுதி விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது 58ம் கால்வாய்.
கால்வாய் வழியாக செல்லும் நீரானது, அய்யணத் தேவன்பட்டி, வேகவதி, குரியம்மாள்புரம், அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி, ஆசிரமம், டி.புதூர், புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்களில் உள்ள கம்மாய்களையும் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்கிறது.
எழுபத்தி ஒரு அடி உயரமுள்ள வைகை அணையில், அணையின் நீர்மட்டம் 67 அடியை கடக்கும் பொழுது, ஐம்பத்தி எட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
தண்ணீர் திறப்பு :-
கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக , வைகை அணையில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது . கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் அணையின் நீர்மட்டம் 69 அடியை கடந்தது. இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியின் பாசனத் தேவைக்காக 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்பட்டது.
கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் வைகை அணை 3 முறை முழுக்கொள்ளளவை எட்டியது. மேலும், கடந்த நவம்பர் முதல் தற்போது வரை வைகை அணையின் நீர்மட்டம், 69 அடிக்கும் மேலே உள்ளது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டும், அணைக்கு வரும் தொடர் நீர்வரத்தால் நீர்மட்டம் குறையவில்லை.
அணையின் நீர்மட்டம் சராசரியாக 70 அடியாக இருப்பதால், ஐம்பத்தி எட்டாம் கால்வாயில் நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து தற்போது வரை திறக்கப்பட்டு வருவதால் உசிலம்பட்டி வட்டார கண்மாய்களில் 70 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
தற்போது கால்வாயில் 70 நாட்களுக்கு மேலாக தண்ணீர் திறக்கப் பட்டு வருவதால், உசிலம்பட்டி கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற நோக்கில் , கோடைகாலத்திலும் இப்பகுதியில் விவசாயம் செய்ய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்புகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.