தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறி
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண் மரணம் :-
தேனி அருகே உள்ள அல்லிநகரம் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு உடல்நிலை குறைவு காரணமாக கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி வீரழகி சிகிச்சைக்கு சென்றுள்ளார். நேற்று மாலை அவருக்கு கையில் ஆபரேஷன் செய்வதற்காக உறவினர்களின் அனுமதியின்றி மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மயக்க ஊசி செலுத்திய பின்னர் வீரழகிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கு அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் வீரழகி உயிரிழந்ததாகக் கூறி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமேஷ் பிரவீன் டோங்கரே, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டத்தை விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.