உலகப் புகழ்பெற்ற வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ள நிலையில் ராட்டினம் ஏலம் அதிக விலைக்கு விடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே திருவிழாவுக்கான எதிர்பார்ப்பையும், உற்சாகத்தை கூட்டியுள்ளது.
சித்திரை திருவிழா:-
தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில். இக்கோவில் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 7 நாட்கள் வரை இரவும் பகலாகவும், மிக சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் காவடி, அக்னி சட்டி, பூ மிதித்தல் போன்ற வழிகளில் அம்மனுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம்.
கொரோனா பாதிப்பு :-
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப் படைத்தது கொரோனா. அதற்கு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றும் விதிவிலக்கல்ல. கடந்த ஆண்டு திருவிழா நடப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால், கோவில் திருவிழாவை நடத்த முடியாத சூழல் உண்டானது.
திருவிழா நடைபெறுவதற்காக, கடைகள் மற்றும் ராட்டினம் போன்றவை ஏலம் விடப்பட்டது. ஆனால் அரசு அனுமதி மறுத்ததால், ஏலம் விடப்பட்ட பணம் திரும்ப ஏலம் எடுத்தவருக்கே கொடுக்கப்பட்டது.
மே மாதத்தில் சித்திரை திருவிழா :-
தற்போது படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள பெரிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் வீரபாண்டி திருவிழா நடைபெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது.
இந்த ஆண்டு கௌமாரி அம்மன் திருக்கோவில் விழாவை முன்னிட்டு
திருவிழா கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்படும் ராட்டினம் ரூ.1.36 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் கண்மலர், முடி காணிக்கை, ராட்டினம், தற்காலிக கடைகள், உணவுக் கூடங்கள் அமைத்தல் உள்ளிட்டவைகளுக்கு பொது ஏலம் நடந்தது. வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 10ல் துவங்கி 17 ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஏப்ரல் 19ல் கொடிமரம் எடுத்தல், ஏப்ரல் 20ல் கம்பம் நடுதல், மே 13ல் தேர் திருவிழா நடைபெறும்.
சித்திரை திருவிழா 2 ஆண்டுகளாக நடக்காத நிலையில் இந்தாண்டு நடைபெற உள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.