குடிசை மாற்று வாரியம் சார்பாக குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்ட வீட்டிற்கு 2 லட்ச ரூபாய் பங்களிப்புத் தொகை கேட்பதால் பங்களிப்பு தொகையினை ரத்து செய்ய வேண்டும் என குறவர் இன மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.
உள்ளிருப்பு போராட்டம் :-
குறவர் இன மக்களுக்கு 2017 ஆம் ஆண்டு வடபுதுபட்டியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு அடுத்த ஆண்டே அந்த இடத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பாக 87 நபர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன.
குடிசை மாற்று வாரியம் சார்பாக கட்டப்பட்ட வீடுகளுக்கு இரண்டு லட்சம் பங்களிப்பு தொகை கேட்பதாகவும், தினக்கூலி வேலை செல்லும் மக்கள் இந்த பங்களிப்பு தொகையை கட்ட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக கூறி, பங்களிப்பு தொகை இல்லாமல் வீடு இலவசமாக வழங்க குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் குறவர் இன மக்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
குடிசை மாற்று வாரியத்திற்கு கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பதால் தமிழக அரசு வீட்டிற்கான பங்களிப்பு தொகையை ரத்து செய்து வீடுகள் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து 50க்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
இதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த பெரியகுளம் தாசில்தார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் முழுமையாக வீடு கட்டி முடிக்கப்படவில்லை முழு வேலை முடிந்தபின் தங்களுடைய கோரிக்கையை அரசிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து குறவர் இன மக்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.