தேனி மாவட்டம் போடி தாலுகா அலுவலகத்திற்கு முன்பு திரண்ட சிரக்காடு பகுதி ஆதிவாழ் பழங்குடியின மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விரைவில் வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பழங்குடியின மக்கள் :-
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டு அமைந்துள்ளது சிரக்காடு.
இப்பகுதியில் சுமார் 35 குடும்பங்களுக்கு மேல் மலைவாழ் ஆதி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். போடி நகராட்சியில் சேகரகமாகும் யூனியன் குப்பைகளை மலைவாழ் மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே கொட்டி வருவதாக கூறப்படுகிறது.
குப்பைகளை கொட்டும் இடத்திற்கு அருகில் மலைவாழ் மக்களின் குடியிருப்பு அமைந்திருப்பதால் இவர்கள் வேறு இடத்தில் வசிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,
நபர் ஒன்றுக்கு சுமார் 3 சென்ட் இடம் கொடுத்து அதற்கு பட்டா வழங்கி வீடு கட்டி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பட்டா வழங்கிய இடத்தில் இதுநாள் வரை வீடுகட்டி தருவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி சிரக்காடு வாழ் பழங்குடியின மக்கள் சுமார் 35 பேர் ஒன்று சேர்ந்து போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் தலைமையில் போடி வட்டாட்சியர் அலுவலகத்த்தில் குவிந்தனர்.
விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை :-
வட்டாட்சியரை நேரில் சந்தித்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விரைவில் வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்தனர். தாங்கள் தற்போது வாழ்ந்து வரும் பகுதியில் யூனியன் குப்பை அதிக அளவில் கொட்டப்பட்டு வருவதால் தங்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதாகவும் குழந்தைகளுக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருவதாகவும், மழைக் காலத்தில் தாங்கள் தற்போது வசித்துவரும் வீடுகள் சேதம் அடைந்து உள்ளதால் வீட்டிற்குள் மழை நீர் புகும் நிலை உள்ளது எனவும், வாழ முடியாத சூழ்நிலை நிலவுவதால் அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்று போடி வட்டாட்சியர் செந்தில் முருகன், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து சிரக்காடு வாழ் மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.