தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் :-
தேனி மாவட்டம், தேனி - அல்லிநகரம் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நேற்று (20.03.2022) மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் உரை :-
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் கூறுகையில், \" பள்ளியின் சூழலை மேம்படுத்துவது, மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதை எவ்வாறு உறுதி செய்தல், தரமான சுவையான மதிய உணவை உறுதிப்படுத்துதல், பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் சூழலை மேம்படுத்தி தருதல், பாட புத்தகம் தாண்டி அவர்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்துதல் உள்ளிட்டவைகளை மேம்படுத்திடவும், பெற்றோர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்காகவே தமிழக அரசால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்று கல்வி என்பதனையும் கருத்தில் கொண்டு, தமிழக மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலனை பாதுகாத்திடுகின்ற வகையில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கல்வி சார்ந்த திட்டங்களை தமிழக அரசு தீட்டி செயல்படுத்தி வருகிறது.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த இரண்டாண்டு காலமாக மாணவ, மாணவியர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
நல்ல மாணவ, மாணவியர்களை உருவாக்குவதோடு அவர்களை பாதுகாப்பதும் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். மாணவ, மாணவியர்கள் தேர்வுகளின் மதிப்பெண்களை வைத்து அவர்களின் எதிர் காலத்தினை ஆசிரியர்கள் கணக்கீடு செய்வதைவிட மாணவ, மாணவியர்களின் தனித்திறனை கண்டறிந்து, அதற்கேற்ப அவர்களை கல்வி பயில செய்திட வேண்டும்.
மாணவ மாணவிகளை கண்காணிக்க வேண்டும் :-
எழுத்துதிறன் தேர்வு, வாசிப்புத்திறன் தேர்வுகள் அவ்வப்போது நடத்தி மாணவ, மாணவியர்களின் திறனை வெளிப்படுத்துவதன் மூலமும், அவர்களின் தனித்திறனை ஊக்குவிப்பதன் மூலமும் மாணவ, மாணவியர்களை பாதுகாத்திட முடியும்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவ, மாணவியர்களின் நடவடிக்கைகளை முழு கவனத்துடன் கண்காணித்திட வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.