தேசிய சுகாதார இயக்கம் சார்பில் தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ பிரிவை நவீனமயமாக்கவும், புதிய கட்டிடங்கள் கட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நவீனமயமாக்கல் :-
தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கம்பம் அரசு மருத்துவமனையில் தான் அதிக அளவிலான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தினசரி உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் என 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்
கம்பம் அரசு மருத்துவமனையில் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 174 படுக்கை வசதியும் உள்ளது. மேலும், 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் 'சீமாங்' சென்டர் வசதி உள்ளது.
பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக கம்பத்தில் மட்டுமே சீமாங் சென்டர் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது .
கம்பம் மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 200க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கம்பம் மருத்துவமனையில் சீமாங் பிரிவை நவீனப்படுத்தவும், இதற்கென தனியாக 5 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டவும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ.12 கோடி நிதியில் தேசிய சுகாதார இயக்கம் அனுமதித்து உள்ளது.
தற்போது சீமாங் பிரிவில் 72 படுக்கைகள் உள்ள நிலையில், சீமாங் சென்டர் நவீனமயமாக்கப்பட்ட பின்பு 200 படுக்கைகள் வரை அமைக்கப்படும்.
கம்பம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு என ஆறு மாடிக் கட்டிடம் 20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரு பிரிவுகளும் கட்டப்பட்ட பின்பு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறும் நபர்களுக்கு எளிதாக அனைத்து வசதிகளும் கிடைக்கும் எனவும், கம்பம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களும், நர்சுகளும் நியமிக்கப்பட உள்ளனர் என்று மருத்துவ அலுவலர் பொன்னரசன் தெரிவித்தார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.