Home /local-news /

சிறுவனின் நேர்மையை கண்டு வியந்த போலீசார் | தேவதானபட்டியில் நடந்த சோகம் | Theni Headlines Today |

சிறுவனின் நேர்மையை கண்டு வியந்த போலீசார் | தேவதானபட்டியில் நடந்த சோகம் | Theni Headlines Today |

 boy's honesty 

 boy's honesty 

Theni Headlines Today | இன்றைய தேனி மாவட்ட செய்திகளின் சில முக்கிய தொகுப்புகள் ஒருசில வரிகளில்...

  சிறுவனின் நேர்மையை கண்டு வியந்த காவல்துறை அதிகாரிகள் -  இன்றைய தேனி மாவட்ட செய்திகளின் சில முக்கிய தொகுப்புகள் ஒருசில வரிகளில்...

  சிறுவனின் நேர்மை :-

  தேனி மாவட்டம் போடி தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில் சுஜித்விசாகன் என்பவர் தான் அணிந்து வந்த 2 பவுன் தங்க செயினை தவறவிட்டு உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் கோபி கிருஷ்ணன் என்ற சிறுவன் கீழே கிடந்த தங்க செயினை எடுத்து பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார்.

  இதனையடுத்து காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் செயின் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் காவல் ஆய்வாளர் சிறுவனின் நேர்மையை பாராட்டி பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

  சிறுவனின் செயலுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

  காவல் நிலையத்தில் நூலகம் :-

  தேனி மாவட்டம் சின்னமனூர் நகர காவல் நிலையத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே தலைமையிலும், போடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் முன்னிலையில், காவல் ஆய்வாளர் சேகர் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் காவல் நிலைய வளாகத்திற்குள் இன்று நூலகம் திறக்கப்பட்டது

  காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைத்து, ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், காவல் நிலையத்தை நாடி அனைத்து தரப்பு மக்களுக்கும் வரவேண்டும், மக்களுக்கு உகந்த இடமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும் சின்னமனூர் காவல் நிலையத்தில் அங்கு பணியாற்றும் துறை அலுவலர்கள் மற்றும் கொடையாளிகள் உறுதுணையோடு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது .

  நூலகத்தில் கண்காணிப்பு கேமரா, குடிநீர் மற்றும் இயற்கைச் சூழலோடு இந்நூலகமானது அமைக்கப்பட்டு உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

  சொத்துவரி தீர்மானம் :-

  தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் வனிதாநெப்போலியன் தலைமையில் நகர்மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.
  திமுக மற்றும் அதிமுக வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்ற நகர்மன்ற கூட்டமானது தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியுடன் தொடங்கியது.

  பின்னர் கம்பம் நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி குறித்த விபரங்கள் பற்றிய விவாதம் நடைபெற்றது. சொத்துவரி உயர்வான விவரங்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டு இருக்கும் போது அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் சொத்துவரி உயர்விற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளி செய்தனர். எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு, சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர், நகர்மன்ற துணைத் தலைவர் சுனோதாசெல்வகுமார் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

  வேலை நிறுத்த போராட்டம் :-

  தேனி மாவட்டம் கம்பத்தில் கர்னல் ஜான் பென்னிகுயிக் சரக்கு ஆட்டோ தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங்கம் உள்ளது. இச்சங்கத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. தற்போது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

  வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கம்பத்தில் சரக்கு வாகனங்கள் முழுவதும் இயங்கவில்லை. வாரச்சந்தை அருகே சுமார் 150க்கும் மேற்பட்ட மினி சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இருசக்கர வாகன விபத்து :-

  தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள அ.ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்லபாண்டி . இவரது உறவினர் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக செல்லபாண்டி, தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

  சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும் வழியான பொம்மிநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து தேனியை நோக்கி வந்து கொண்டிருந்த கார் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் செல்லபாண்டி மற்றும் அவரது மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

  செய்தியாளர்: சுதர்ஸன்
  Published by:Arun
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி