Home /local-news /

திருடுபோன நகையை சாணி டெக்னிக் மூலம் மீட்ட போலீஸ் அதிகாரி

திருடுபோன நகையை சாணி டெக்னிக் மூலம் மீட்ட போலீஸ் அதிகாரி

Chinamanur inspector 

Chinamanur inspector 

பணம் மற்றும் நகையை எடுத்தவர்கள் சாணிக்குள் நகையை வைத்து உருட்டி அண்டாவில் போடுமாறு போலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

    தேனி மாவட்டத்தில் திருட்டு போன நகைகளை திரைப்பட பாணியில் கண்டு பிடித்த காவல்துறை அதிகாரிகளுக்கு பொது மக்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

    நகை திருட்டு :-

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பகுதியில்  வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். மார்க்கையன்கோட்டை பகுதியில் ஊர்திருவிழா நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவிற்காக திருவண்ணாமலையில் வசித்து வரும் தனது மகளை அழைத்துள்ளார் வெள்ளைச்சாமி.

    இதனையடுத்து கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு வாரமாக மார்க்கையன்கோட்டையில் தங்கியுள்ளார் வெள்ளைச்சாமியின் மகள் ரெஜினா. கோவில் திருவிழாவையொட்டி இரவு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண வெள்ளைச்சாமி மற்றும் ரெஜினா குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வந்துள்ளனர்.

    ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை கண்டு களித்து வீட்டுக்கு திரும்பிய ரெஜினா தான் வீட்டில் வைத்திருந்த 12 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீடு முழுவதும் தேடிய ரெஜினா மற்றும் அவரின் குடும்பத்தினர் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டதை உறுதி செய்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னமனூர் காவல் ஆய்வாளர் சேகர் தலைமையிலான காவல்துறையினர் வீடு முழுவதும் சோதனையிட்டு அருகிலுள்ள அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வெள்ளைச்சாமி வழக்கமாக வீட்டை பூட்டி விட்டு செல்லும்போது சாவியை ஜன்னல் அருகே உள்ள சோப்பு டப்பாவில் வைத்து செல்வது தெரியவந்தது.

    மேலும் வீட்டின் கதவு, பூட்டு உடைக்க படவில்லை . பணம் மற்றும் நகை கொள்ளை போன வீட்டின் அருகே மொத்தம் 30 வீடுகள் மட்டுமே இருந்துள்ளது.

    இதனால் பணம் மற்றும் நகையை வீட்டின் அருகில் உள்ளவர்கள் அல்லது அவரது உறவினர்கள் திருடி இருக்கலாம் என்ற நோக்கில் புது யுத்தியை காவல்துறையினர் கையாண்டனர்.

    அதன்படி, பணம் மற்றும் நகை திருடு போன வீட்டின் அருகில் உள்ள 30 வீடுகளைச் சேர்ந்த அனைவரையும் ஒரே இடத்திற்கு வருமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

    ஒரே இடத்தில் அனைவரும் கூடிய நிலையில், பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரியான சேகர் பணம் மற்றும் நகையை யாரோ அறியாமல் திருடி உள்ளனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் திருடுபோன நகை மற்றும் பணத்தை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளியை கண்டுபிடித்து விடலாம்.

    இதனால் அறியாமையில் நகை மற்றும் பணத்தை திருடிய நபர்கள் தாமாக ஒப்புக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    நேரடியாக பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த நபர் ஒப்புக் கொள்ளாமல், ஒரு அண்டாவை வைத்து அந்த அண்டாவில் அனைவரும் சாணியை உருட்டி அன்டாவிற்குள் போடுமாறு கூறியுள்ளார். பணம் மற்றும் நகையை எடுத்தவர்கள் சாணிக்குள் நகையை வைத்து உருட்டி அண்டாவில் போடுமாறு கூறியுள்ளார்.

    இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த அனைவரும் சாணியை உருட்டி அண்டாவில் போட்டனர். அனைவரும் சாணியை உருட்டி போட்டு சென்ற பிறகு அண்டாவை சோதனை செய்ததில் அதில் திருடுபோன 12 பவுன் நகை கிடைத்தது.

    திருடுபோன நகைகளை மீட்ட காவல்துறையினர் ரெஜினா விடம் நகை ஒப்படைத்தனர். மேலும் பணத்தை பெறுவதற்கு விசாரணை நடத்தி பணத்தையும் பெற்று தர உள்ளதாகவும், பணம் மற்றும் நகையை திருடியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    வினோதமான முறையில் திருட்டை கண்டு பிடித்த காவல்துறை ஆய்வாளருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி