தமிழக அரசின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 2021 - 2022 ஆம் நிதியாண்டு பட்டம் மற்றும் பட்டயம் முடித்த 952 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.4,76,00,000 நிதியுதவியும், பத்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முடித்த 1248 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 என ரூ.3,12,00,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் , ஒரு பயனாளிக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 2200 பயனாளிகளுக்கு 17,600 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்க முடிவு செய்யப்பட்டது . அவற்றில் இதுவரை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பட்டம் மற்றும் பட்டயம் முடித்த 63 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம்
முப்பதொன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவியும்,
பத்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முடித்த 49 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் பனிரெண்டு இலட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் ஒரு பயனாளிக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 112 பயனாளிகளுக்கு 896 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து, இன்று கம்பம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கம்பம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பட்டம் மற்றும் பட்டயம் முடித்த 50 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் இருபத்து ஐந்து இலட்சம் ரூபாய் நிதியுதவியும், பத்தாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முடித்த 50 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் பனிரெண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பயனாளியின் வங்கிக் கணக்கில் மின்னணு தீர்வை (ECS) மூலம் வரவு வைக்கப்பட்டது.
மேலும் ஒரு பயனாளிக்கு 8 கிராம் தங்கம் வீதம் 100 பயனாளிகளுக்கு 800 கிராம் தாலிக்கு தங்கத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள் , திமுக முக்கிய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியை முடித்து சென்ற கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணனுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை தனியார் மண்டபத்தில் அரசு நிகழ்ச்சியில் சுமார் 100 நபர்களுக்கு மேல் கலந்துகொண்டனர். தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்து, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமணையை நாடி வருகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.