கம்பம் : தேர்தல் நேரத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வியாபாரிகளால் பரபரப்பு
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சிறு வியாபாரிகள் ஒன்றிணைந்து கம்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறு வியாபாரிகள் :-
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் சாலை ஓரங்களில் சிறிய அளவில் கடை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டுவருபவர்கள் சிறு வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கம்பம் பகுதியில் காந்தி சிலை அருகில் சாலை ஓரங்களில் செயல்பட்டு வந்த சிறு வியாபாரிகளின் கடைகளை போலீசார் அகற்ற கூறியதையடுத்து, சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டன. இதனால் காந்தி சிலை ரோட்டோரங்களில் செயல்பட்டுவந்த பெட்டிக்கடை, பழக்கடை போன்ற கடைகளை நடத்தி வந்த சிறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து சிறு வியாபாரிகள் மற்றும் தெருவோர சிறு வியாபாரிகள் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகராட்சி மற்றும் காவல் துறையினரிடம் விளக்கம் கேட்க முற்பட்டுள்ளனர். ஆனால், காவல்துறையினரும் நகராட்சி அலுவலர்களும் முறையான பதில் அளிக்கவில்லை என்ற காரணத்தால் சிறு வியாபாரிகளின் மாநில தலைவர் ராசா முருகேசன் தலைமையில் வியாபாரிகள் ஒன்றிணைந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
தேர்தல் சமயம் :-
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெறுவதற்கான காலம் என்பதால் நகராட்சி அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நகராட்சியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தகவலறிந்து வந்த கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டி போரட்டத்தில் ஈடுபட்ட சிறு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிறு வியாபாரிகள் சங்க தலைவர் கூறுகையில், " சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் சாலை ஓரத்தில் நடத்தும் கடைகளின் மூலமே உள்ளது. தற்போது காந்தி சிலை அருகில் செயல்பட்டு வந்த சிறு வியாபாரிகளின் கடைகளை காவல்துறையினர் அகற்ற கூறியுள்ளது, சிறு வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டம், ஒழுங்கு காரணமாக காவல்துறையினர் கடைகளை அகற்ற கூறுவது தவறு. பிரச்சினைக்குரிய கடைகளை மட்டும் அகற்றி, மற்ற சிறு வியாபாரிகளை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கூறினார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.