தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனுடைய 18 வயதுக்குட்பட்டோருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் மாற்றுத்திறனுடைய நபர்களுக்கு UDID அட்டை வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்றது.
மருத்துவ முகாம் :-
தேனி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் மருத்துவ மதிப்பீட்டு முகாமில் பங்கேற்று மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றனர்.மேலும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையை புதுப்பித்தல், புதிதாக மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு புதிய அட்டை வழங்குதல், ரயில் மற்றும் பஸ் பயண சலுகை சான்றிதழ்களும் இந்த முகாமில் வழங்கப்பட்டது.
புதிதாக கல்வி உதவித்தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கப்பட்டு புதிய சேர்க்கையும் நடைபெற்றது. இதுவரை விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காத நபர்களுக்கு மீண்டும் புதுப்பித்து உதவித்தொகை கிடைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் , இலவச அறுவை சிகிச்சை செய்வதற்கான பதிவும் நடைபெற்றது. இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றது. முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச தேனீர் வழங்கப்பட்டது.
இம்முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனுடைய குழந்தைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அடையாள அட்டை பெறுதல் மற்றும் இதர பணிகளுக்கு விண்ணப்பம் அளித்துச்சென்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.