கம்பம் அருகே புதுப்பட்டி சாலையில் தனியாருக்கு சொந்தமான கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 6 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே புதுப்பட்டியில் உத்தமாபாளையத்தை சேர்ந்த அபுதாஹீர் என்பவருக்கு சொந்தமான கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆண்கள், பெண்கள் என 20 நபர்களுக்கு மேல் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் மின்கசிவு காரணமாக கயிறு தொழிற்சாலையில் தீ பற்றியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த, வேலையாட்கள் தீயை அணைக்க போராடினர்கள். ஆனால், கயிறு தயாரிக்க பயன்படும் தேங்காய் நார் என்பதால் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென பரவி அடுத்தடுத்த அறைகளுக்குச் பரவியது. உடனடியாக கம்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சுமார் ஏழு பேர் கொண்ட குழு ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்
இந்த தீ விபத்தினால் தொழிற்சாலையில் கயிறு தயாரிக்கும் நூற்றுக்கும் அதிகமான நார்கட்டுகள் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்கள், விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர் உள்பட 6 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.தீ விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.