Home /local-news /

தேனி: உள்ளாட்சி தேர்தல் கள நிலவரம் – உற்சாகத்தில் விஜய் மக்கள் இயக்கம்  

தேனி: உள்ளாட்சி தேர்தல் கள நிலவரம் – உற்சாகத்தில் விஜய் மக்கள் இயக்கம்  

Vmi candidate 

Vmi candidate 

தேனி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் ஆதரவு உள்ளதால் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    தேனி: உள்ளாட்சி தேர்தல் கள நிலவரம் – உற்சாகத்தில் விஜய் மக்கள் இயக்கம்

    தேனி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் ஆதரவு உள்ளதால் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    உள்ளாட்சித் தேர்தல் :-

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக மற்றும் இதர பிரதான கட்சிகளும் சிறிய கட்சிகளும் தங்களது வேட்பாளர்களுக்கான பிரச்சாரங்களை தீவிரமாக செய்து வருகின்றன.

    பிரதான கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் .

    தேனி மாவட்டத்தில் கட்சி சார்பாகவும், சுயேட்சை வேட்பாளராகவும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் கடைசியாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக போட்டியிட்ட நபர்கள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதன் எதிரொலியாக,
    நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர்.

    விஜய் மக்கள் இயக்கம் :-


    கடந்த முறை விஜய்யின் பெயர் படம் மற்றும் இயக்கத்தின் கொடியை பயன்படுத்த அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த தேர்தலில் விஜய்யின் படம், பெயர், இயக்கத்தின் கொடியை பயன்படுத்த தலைமை க்ரீன் சிக்னல் தந்துள்ளது.

    இதனால், விஜய் மக்கள் இயக்கம் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கி தேர்தல் பணியை செய்து வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் கடும் இழுபறிக்கு பின்பு இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, சின்னமனூர், கோம்பை, அனுமந்தன்பட்டி என மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆறு வேட்பாளர்கள் மட்டுமே களமிறங்கியுள்ளனர்.

    மாவட்டம் முழுவதிலும் இருந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட விருப்ப மனு கிடைக்கப் பெற்ற போதிலும், மாவட்ட தலைமை வேட்பாளர்கள் தேர்வில் தெளிவாக இருந்தது.
    அனைவருக்கும் வாய்ப்பளிக்காமல் குறிப்பிட்ட இடங்களுக்கு குறிப்பிட்ட செல்வாக்குடைய வெற்றி பெறும் வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட மாவட்ட தலைமை முடிவு செய்தது என்கிறார்கள்.

    தற்போது 6 வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    வெற்றி நம்பிக்கை :-

    வீடு வீடாக சென்று விஜய்யின் அரசியல் பயணத்தையும், விஜய் செய்த நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறியும், வேட்பாளர் கடந்த நாட்களில் செய்த சமூக சேவைகளை எடுத்துக் கூறியும், வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அந்த பகுதியில் செல்வாக்கு மிகுந்த, மக்களுக்கு நெருக்கமான வேட்பாளராக இருப்பதால் மக்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரகாஷ் கூறுகையில், " இந்த தேர்தலில் தேனி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்புண்டு. நாங்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களிலும் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களிலும் மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது . இதனால், விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.


    செய்தியாளர்: சுதர்ஸன்
    First published:

    Tags: Election, Theni, Vijay

    அடுத்த செய்தி