தேனி மாவட்டம்உத்தமபாளையம் கோகிலாபுரத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான கவிதா, தனது முதல் பணி நாள் முதல் இன்று வரை கையூட்டு வாங்காமல் பணியாற்றி வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
லஞ்சம் :-
ஒரு அரசு அலுவலர் தனது பணியினை செய்யவோ அல்லது செய்யாமல் இருப்பதற்கு, பிற நபர்களிடம் இருந்து பணம் வாங்குவது லஞ்சமாக பார்க்கப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி கடும் குற்றம் ஆகும். ஒரு தனிநபர் லஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக இருக்கும் அரசு ஊழியர் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 10ன் கீழ் ஊழல் செய்தவர் ஆகிறார். ஆனாலும் லஞ்சம் வாங்கி அரசு ஊழியர்கள் கைதாகும் செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
அசத்தும் கிராம நிர்வாக அலுவலர் :-
இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கவிதா தற்போது கோகிலாபுரம் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது 40வது வயதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி தேனி மாவட்டத்தில் 300 க்கு 275 மதிப்பெண் பெற்று கிராம நிர்வாக பணியில் சேர்ந்துள்ளார். இவர் 2011 ம் வருடம் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை லஞ்சம் வாங்காமல் பணி புரிந்து வருகிறார்.
இதனால் மேல் இடங்களில் இருந்தும் அவ்வப்போது அழுத்தம் வருவதையும், பிற அதிகாரிகள் இவரை புறக்கணிப்பதும் வாடிக்கையாவே இருந்துள்ளது. இருப்பினும் தனது செயலால், நேர்மையை நோக்கிய பயணத்தில் பல விருதுகளையும், மக்களிடையே சிறந்த நற்பெயரையும் பெற்று சாதித்து உள்ளார்
மக்களின் விருப்ப VAO :-
தனது நேர்மையின் மூலம் மக்கள் மணதை வென்ற இவர், மக்களின் விருப்ப கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இது குறித்து கவிதா கூறும்போது, \"எனது நேர்மை பயணம் சகாயம் ஐயா அவர்களின் பாதையை மையமாகக் கொண்டது, நான் இதுவரை அவரின் நேர்மையை பின்பற்றி வருகிறேன். இதனால் நான் பல சங்கடங்களை சந்தித்துள்ளேன். ஆனலும் நேர்மையே எனது உயிர் மூச்சு. நான் நேர்மையை கடைப்பிடிப்பதால் விருதுகளையும் பெற்றுள்ளேன்.
எனது மேஜையில் 'நேர்மைக்கு துணை ' என்ற வாசகமும், ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற வாசகமும் எப்போதும் இருக்கும். லஞ்சம் இல்லாத நாடே எனது குறிக்கோள் என்றும், எனக்கு எப்போதும் இளைஞர்களின் ஆதரவும் மக்களின் ஆதரவும் உண்டு என்றும், மக்கள் லஞ்சம் தருவதை தவிர்த்து விடுவது எதிர்கால தலைமுறைக்கு உதவியாக இருக்கும் என்கிறார்\", கிராம நிர்வாக அலுவலர் கவிதா.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.