Home /local-news /

தேனியில் நடந்த இன்றைய முக்கிய நிகழ்வுகள்.!

தேனியில் நடந்த இன்றைய முக்கிய நிகழ்வுகள்.!

Theni news

Theni news

Theni| தேனி மாவட்டத்தில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில்...

  மாவட்ட ஆட்சியரின் ஆய்வு முதல் மனித உரிமை ஆணைய விசாரணை வரை.. தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகள் (09/4/22)

  தேனி மாவட்டத்தில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில்...

  மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை :-

  தேனி மாவட்டம் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டதாக வழக்கறிஞர் ஹென்றி திபேன் அளித்த புகாரை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரிசாத் ராஜிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர், நீதிபதி ஜெயச்சந்திரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், 'விசாரணை கைதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம். அவர் உடம்பில் காயங்கள் இருக்கின்றன. மருத்துவர்கள் காயம் ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். முழு விசாரணைக்கு பிறகு தான் கூற முடியும் என தெரிவித்தார்.

  மழையால் குளிர்ந்த தேனி
  மாவட்டம்
  :-

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில், இன்றும் தேனி மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

  போடிநாயக்கனூர், கம்பம், ஆண்டிபட்டி, தேன, பெரியகுளம், கூடலூர் என அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

  மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் ஒரு மணிக்கு மேல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கோடை மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

  வீரப்ப ஐயனார் கோவில் திருவிழாவிற்கான முன்னேற்பாடு :-

  தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் விரப்ப அய்யனார் கோவில் சித்திரைத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், திருவிழா முன்னேற்பாடு குறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி சேர்மன் ரேணு பிரியா பாலமுருகன் ஆய்வு மேற்கொண்டார். கோவில் திருவிழாவிற்கு வருகை புரியும் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் அனைத்து வகையான வசதிகளும் செய்து கொடுப்பதாக நகராட்சி ஆணையரும் சேர்மனும் உறுதியளித்தனர். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் கடவுள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  சுருளி அருவி பகுதியில் குவியும் சுற்றுலா பயணிகள் :-

  தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி கடந்த மாதம் முதல் திறக்கப்பட்டு உள்ள நிலையில், சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. கோடைகாலம் என்பதால் நாளுக்கு நாள் பொதுமக்களின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கோடைகாலத்தை சமாளிக்க வார இறுதி நாட்களில் அதிக அளவிலான பெண்கள், குழந்தைகள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் அருவி பகுதிக்கு வர தொடங்கி உள்ளனர்.

  அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக் கவசம் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருத்தல் கட்டாயம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  யுஜிசியின் முடிவுக்கு தேனி மாவட்ட கல்வியாளர்கள் ஆதரவு :-

  Ugc என்றழைக்கப்படும் பல்கலைக்கழக மானிய குழுவானது இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. மாணவர்கள் உயர்நிலைக் கல்வியை முடித்து தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 180 நாட்களுக்குள்ளாக பட்டம் வழங்கப்பட வேண்டும். அதாவது மாணவர்கள் தேர்ச்சி பெற்றதிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவே பட்டம் வழங்கப்பட வேண்டும் அவ்வாறு வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

  மாணவர்களுக்கு தாமதமாக பட்டம் வழங்கப் படுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

  பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்குவதில் தாமதம் செய்வதாக நாடு முழுவதும் இருந்து ஏராளமான குற்றச்சாட்டுகள் யுஜிசி க்கு வந்த நிலையில் யுஜிசி எடுத்த இந்த நடவடிக்கைக்கு பல கல்வியாளர்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்வியாளர்களும் இதற்கு பெருமளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  மாவட்ட ஆட்சியர் ஆய்வு :-

  தேனி மாவட்டம் போடி முதுவாக்குடி கிராமத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆய்வு செய்தார். போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் கொட்டகுடி ஊராட்சி முதுவாகுடி கிராமத்தில் பழங்குடி இன மக்களுக்கு  கட்டப்பட்டு வரும் 14  பசுமை வீடுகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் பார்வையிட்டார். உடன் உதவி இயக்குநர் ஊராட்சிகள், உதவி திட்ட அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஊராட்சி பணியாளர்கள், வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோர்  இருந்தனர்.

  கொரோனா தொற்று விவரம் :-

  தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 45 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை

  மநீம ஆர்ப்பாட்டம் :-

  தேனி மாவட்டம் போடி கட்டபொம்மன் சிலை அருகே மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சொத்துவரி உயர்வை கண்டித்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கயிறு கட்டி இருசக்கர வாகனங்களை இழுத்து வந்தும், சிலிண்டர்களுக்கு பாடை கட்டி தூக்கி வந்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  செய்தியாளர்: சுதர்ஸன்
  Published by:Murugesh M
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி