தேனி மாவட்டத்தில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து இன்றுடன் முடிவடைய உள்ளது.
ஹெலிகாப்டர் சுற்றுலா :-
தேனி மாவட்டத்தில் விமான நிலையம் இல்லாத நிலையில், தேனி மாவட்ட மக்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் மதுரை கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களுக்கு சென்றால் மட்டுமே பயணிக்க முடியும்.
ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள மக்களின் விமான ஆசையை நிறைவேற்றும் வகையில், தேனி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தனியார் நிறுவனம் சார்பில் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் சுற்றுலாவில் மாவட்டத்தில் உள்ள சில முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
தேனி - பெரியகுளம் பைபாஸ் சாலை லட்சுமிபுரத்தில் முதன்முறையாக, கட்ஸி அட்வென்ஜர்ஸ் ஹெலிபேட் என்ற நிறுவனம் ஹெலிகாப்டரை சுற்றுலாவிற்காக அறிமுகம் செய்து, தற்போது மக்கள் மத்தியில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து உள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே இந்த சுற்றுலா நடைபெற்றது.
இந்த ஹெலிகாப்டர் சுற்றுலாவில் பயணிக்கும்போது ஒரே நேரத்தில் ஹெலிகாப்டரில் 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஒரு நபருக்கு கட்டணமாக 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலாவில் பயணிக்கும் பயணிகள் விமானத்தில் அதிகபட்சமாக 10 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே பயணிக்கின்றனர். இந்த குறுகிய நேரத்திலேயே பெரும்பாலான சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்.
இந்த ஹெலிகாப்டர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 16 முறை பயணம் செய்து, மாலை 4 மணியளவில் நிறைவுபெறும்.
பயணத்தின்போது வைகை அணை, மஞ்சளார் அணை, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை மற்றும் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம் வரை சுற்றி காண்பிக்கப்படுகிறது.
கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் தலைசுற்றல், இருதய பரிசோதனை செய்த பின்னரே ஹெலிபேட் பயணம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா, மருத்துவம், ஆம்புலன்ஸ், ஏர் ஆம்புலன்ஸ், தீயணைப்பு, தீ விபத்து, புயல், மழைகாலம், திருமணவிழா, கோயில் தலங்கள், கும்பாபிஷேகம் போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் பறக்க நினைக்கும் சுற்றுலாவாசிகளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரும்பாலான சுற்றுலா வாசிகள் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
இன்று தேனி மாவட்டத்தில் முடிவடையும் இந்த சுற்றுலா அடுத்தபடியாக பழனி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல உள்ளது.
முன்பதிவின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் அதிக புக்கிங் இடம்பெற்றால், மீண்டும் தேனி மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் சுற்றுலா வர வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் கூறியுள்ளனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்-தேனி
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.