தேனி நகர் பகுதியில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மரங்கள் சாய்ந்தது.
திடீர் மழை :-
கோடை காலம் துவங்கும் முன்பே தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது
அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இருப்பினும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் மட்டும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு லேசான மழை பெய்து வந்தது.
இந்நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 7) பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தேனி நகர் பகுதிகளான அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, ரத்தினம் நகர், கருவேல் நாயக்கன்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் மாலை இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் கனமழை காரணமாக நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக தேனி நகரின் முக்கிய பகுதியான என்.ஆர்.டி நகர் பகுதி மற்றும் தேனி காவல் நிலையம் முன்பு மரங்கள் சாய்ந்து விழுந்தது.
இதேபோல் பழனிச்செட்டிபட்டி பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது மரம் சாய்ந்து விழுந்ததில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதே போல் நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மட்டும் மின்தடை ஏற்பட்டுள்ளது. சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.