தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே தோட்டத்திற்கு பைக்கில் சென்று திரும்பிய தம்பதி மீது, கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலியானார்கள்.
வாகன விபத்து :-
தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் 70 வயதாகும் தசரதன். அவரது மனைவி அமுதா. இவர்கள் இருவரும் தற்போது கூடலூரில் உள்ள கன்னிகாளிபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கூடலூர் அருகே காஞ்சி மரத்துறை பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. இவர்கள் தென்னந்தோப்பிற்கு தினசரி சென்று தோட்ட பணிகளை செய்வது வழக்கம். வழக்கம்போல நேற்று (மார்ச் 19) விவசாய தோட்டத்திற்கு சென்றுவிட்டு கணவன் மனைவி இருவரும் வீட்டுக்கு மோட்டார் பைக்கில் திரும்பியுள்ளனர்.
காஞ்சிமரத்துறை சாலையில் இருந்து லோயர்கேம்ப் - குமுளி நெடுஞ்சாலை இணைப்பில் கூடலூர் நோக்கி செல்ல தசரதன் மோட்டார் பைக்கை திருப்பி உள்ளார். அப்போது கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கங்கழா பஞ்சாயத்தைச் சேர்ந்த முகமது சியாஸ் என்பவர் ஓட்டி வந்த கார், தசரதன் ஓட்டி வந்த மோட்டார் பைக் மீது பயங்கரமாக மோதியது.
வாகனம் மோதிய வேகத்தில் இருவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இதில் தசரதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அமுதா படுகாயமடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் குமுளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். எஸ்ஐ அல்போன்ஸ் ராஜா தலைமையில் போலீசார் படுகாயமடைந்த அமுதாவை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அமுதாவுக்கு முதற்கட்ட சிகிச்சை சிகிச்சை அளித்து, பின் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா இறந்து போனார். கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் முகமது சியாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.