தேனி மாவட்டத்தின் கூடலூர் நகர்மன்றத் தலைவர் பதவியை திமுகவைச் சேர்ந்த பத்மாவதி லோகந்துரை போட்டியின்றி தேர்வு செய்து கூடலூர் நகர மன்ற தலைவராக தேர்வாகியுள்ளார்
நகர்மன்ற தலைவர் :-
தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து, பெரும்பாலான இடங்களில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள், அந்தந்த பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவி ஏற்பு விழாவில் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் இன்று நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் திமுக 11 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இன்று கூடலூர் நகரமன்ற தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பத்மாவதி லோகந்துரை நகரமன்றத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த 8 வார்டு உறுப்பினர்களும் தேர்தலில் கலந்து கொள்ள வரவில்லை. இதனால் கூடலூர் நகரமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஏற்கனவே பெரும்பான்மை இருக்கும் நிலையில், திமுக வேட்பாளரை எதிர்த்து எதிர்தரப்பினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், திமுகவைச் சேர்ந்த பத்மாவதி லோகந்துரை வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இதனை அடுத்து வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பத்மாவதி, ஊர்வலமாக அழைத்துச் சென்று பட்டாசு வெடித்தும் வெற்றியை கொண்டாடினர். கூடலூர் நகர மன்ற துணைத் தலைவருக்கான தேர்தல் பிற்பகல் 2 மணிக்கு மேல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.