பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சரக்கு ஏற்றும் ஆட்டோ வாகனங்கள் வேலை நிறுத்தம்
தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சரக்கு ஏற்றும் ஆட்டோ வாகனங்களின் உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.
வேலை நிறுத்த போராட்டம் :-
தேனி மாவட்டம் கம்பம் நகரின் அருகில் உள்ள கேரள மாநிலத்திற்கு காய்கறி உட்பட அத்தியாவசியப் பொருள்கள் சிறிய ரக சரக்கு வாகனத்தில் தினசரி அனுப்பப்பட்டு வருகிறது. கம்பம் பகுதியில் விளையும் காய்கறிகள் மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சிறிய சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. தோட்டங்களில் விளையும் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கம்பம் நகரில் உள்ள மினி சரக்கு வாகனங்கள் பயன்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சிறிய ரக சரக்கு வாகனங்கள் இயக்கப்படாமல் வாகனங்களின் உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கம்பத்தில் கர்னல் ஜான் பென்னிகுயிக் சரக்கு ஆட்டோ தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங்கம் உள்ளது. இச்சங்கத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. தற்போது பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கம்பத்தில் சரக்கு வாகனங்கள் முழுவதும் இயங்கவில்லை. வாரச்சந்தை அருகே சுமார் 150க்கும் மேற்பட்ட மினி சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மினி சரக்கு வாகன சங்க தலைவர் செல்வ பிரபு கூறுகையில், \" எரிபொருள் விலை உயர்வு எங்களை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது. பொதுமக்களிடம் அதிக வாடகை பெறமுடியவில்லை. நிதி நிறுவனங்களுக்கு தவணை செலுத்த முடியவில்லை. எனவே எங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்\" என்றார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.