கம்பம் : பேருந்து பயணிகளுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பேருந்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற பயணிகளுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர், முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கு அபராதம் விதித்தார்.
கொரோனா பரவல் :-
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மக்களிடையே கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், தமிழக அரசு அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் போக்குவரத்து ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையில், கம்பம் டூ குமுளி சாலையில் முக கவசம் அணியாமல் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பேருந்துகளில் முக கவசம் அணியாமல் பயணிகளை ஏற்றிய நடத்துனரை எச்சரித்து, அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட கம்பம் காவல் ஆய்வாளர் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதித்து அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். .
மேலும் தனியார் பேருந்துகளில் முக கவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளுக்கும் நடத்துனருக்கும் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது . தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் முக கவசம் இன்றி வரும் பயணிகளை ஏற்றினால் நடத்துனருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர் .
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.