Home /local-news /

சாலை மறியல் முதல் கொரோனா நிலவரம் வரை.. இன்றைய தேனி மாவட்ட செய்திகள் (10/4/22)

சாலை மறியல் முதல் கொரோனா நிலவரம் வரை.. இன்றைய தேனி மாவட்ட செய்திகள் (10/4/22)

Theni local news update 

Theni local news update 

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய உள்ளூர் செய்திகளின் முக்கிய தொகுப்பு ...

  தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய உள்ளூர் செய்திகளின் முக்கிய தொகுப்பு ...


  காட்டுத் தீ தடுப்பு
  விழிப்புணர்வு
  :-

  கோடை காலம் என்பதால் கடும் வெயிலின் வெப்பத்தினால் கம்பம் கிழக்கு வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சுருளி அருவி அருகே உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ ஏற்பட்டு ஏராளமான உயர் ரக மரங்கள் எரிந்து தீக்கிரையானது. இதனை தடுக்கும் விதமாக வனப்பகுதியில் தீத்தடுப்பு குறித்து வனத்துறை பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க மாவட்ட வனத்துறை சார்பில், அனைத்து வனச்சரகர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  அதன்படி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பகுதியில் கம்பம் கிழக்கு வனச்சரகர் அருண்குமார் தலைமையில் வன ஊழியர்களுக்கு, தீ தடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தீயை அணைப்பது, தீத்தடுப்பு காவலர்கள் செய்ய வேண்டிய பணிகள், முதலுதவி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

  சுமார் 20க்கும் மேற்பட்ட தீ தடுப்பு வனகாவலர்கள் கலந்து கொண்டு வனப்பகுதிகளில் தீயை அணைப்பது பற்றி பயிற்சியில் ஈடுபட்டனர்.


  சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறப்பு :-

  மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நாளை மாலை நீர் திறந்து விடப்படுகிறது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை முன்னிட்டு வைகை அணையில் இருந்து நாளை மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை 5 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது.


  நீர் மோர் பந்தல் :-

  கோடை காலத்தை சமாளிக்க அரசியல் கட்சிகள் சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வரும் நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பாக நீர் மோர்பந்தல் அமைக்கப்பட்டது. 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஓ.சண்முகசுந்தரம் பொதுமக்களுக்கு நீர் மோர், தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். நகர செயலாளர் ராதா, நகரத் துணைச் செயலாளர் அப்துல் சமது, தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜகோபால், எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர் ராஜவேல்,வார்டு செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்


  சாலை மறியல் :-

  தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் முறையற்று உள்ளதாக பொதுமக்கள் கூறிவருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது . இந்நிலையில், அரண்மனைப்புதூர் மெயின்ரோட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சிலர் காலிக்குடங்களுடன் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


  மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு :-

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குமணன் தொழு, வெள்ளிமலை மற்றும் அரசரடி காட்டுப் பகுதிகளில் இருந்து மூல வைகை ஆறு உருவாகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

  இந்த நிலையில் கடமலைகுண்டு, மயிலாடும்பாறை சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. மூல வைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை, அரசரடி, காந்தி கிராமம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுவாக பங்குனி சித்திரை, வைகாசி ஆகிய தமிழ் மாதங்களில் மூல வைகை ஆறு வறண்டு காணப்படும் நிலையில், கோடை மழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  கொரோனா நிலவரம் :-

  தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 50 பேருக்கு
  கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. அதன்படி தேனி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கொரனோ உயிரிழப்புகளும் ஏதுமில்லை.

  செய்தியாளர்: சுதர்ஸன்
  Published by:Murugesh M
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி