தேனி : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி - பரிசுத் தொகை மற்றும் போட்டியில் பங்கு பெறுவது தொடர்பான முழு விவரம் இதோ!
நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளை போற்றும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் நடத்தி பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
பேச்சுப்போட்டி :-
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் \"நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்\" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டான 2022-23 ல் அண்ணல் அம்பேத்கர் (14.04.2022) பிறந்தநாளையொட்டி உரிய வழிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே அண்ணல் அம்பேத்கர் பற்றி பேச்சுப் போட்டிகள் 19.04.2022 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளன.
பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
விதிமுறைகள் :-
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டி நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான பள்ளிப் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
அதே போன்று பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கல்லூரி மாணவர்கள், அவர்கள் பயிலும் கல்லூரியின் முதல்வரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மதுரை கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்.
கல்லூரிக் கல்வி இணை இயக்குநரால் முதற்கட்டமாக கீழ்நிலை போட்டி நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப்படும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கல்லூரிப் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டி நடக்கும் நாளில் அறிவிக்கப்பட்டு, போட்டிகளுக்குரிய முடிவுகளும் அன்றே அறிவிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி காலை 10.00 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 2.00 மணி முதலும் நடைபெறவுள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000 , மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையிலும் பணப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000 வீதம் வழங்கப்படவுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.