அரசு நல்வாழ்வு மையம் மருத்துவ அலுவலர்கள் ஊதியம் மற்றும் பணி நீட்டிப்பு தொடர்பாக போராட்டம் நடத்தி, தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பணி நீட்டிப்பு தேவை :-
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நல்வாழ்வு மைய மருத்துவர்கள் மனு ஒன்றை அளித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்று பரவலின் போது தமிழகத்தில் தேவைப்பட்ட மருத்துவ சேவைகளுக்காக தற்காலிகமாக தமிழக அரசின் சார்பில் ஒப்பந்தம் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர் .
கொரோனா முதல் அலையின் போது கொரோனா தடுப்பு பணியில் சிறப்பு மருத்துவராக ஆறு மாதம் முதல் 9 மாதம் வரையும், அதற்கு பின்பு மருத்துவர்கள் நல்வாழ்வு மையங்களில் (மினி கிளினிக் ) பணியாற்றினார்கள்.
இரண்டாம் அலையின் தீவிர பாதிப்பு காரணமாக இவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவு, கொரோனா கவனிப்பு மையம் , சிறப்பு தடுப்பூசி முகாம், கொரோனா கட்டளை மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பணியமர்த்தப்பட்டனர்.
இவர்களது தற்காலிக பணி மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதாலும், கடந்த மூன்று மாதங்களாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதாலும் தற்போதைய மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தற்காலிக பணியில் மருத்துவ சேவை செய்து வரும் மருத்துவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முப்பதிற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பேரிடர் காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்கள் 2,322 பேர் சிறப்பு தேர்வு மூலம் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டனர். எனவே அதனைப் போலவே கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு தற்காலிக பணியை நீட்டித்து பணி பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.