Home /local-news /

தேனி : ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு வேட்பு மனு தாக்கல் செய்தால் வெற்றிக்கு வாய்ப்பு - புது ரூட்டில் வேட்பாளர்கள்

தேனி : ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு வேட்பு மனு தாக்கல் செய்தால் வெற்றிக்கு வாய்ப்பு - புது ரூட்டில் வேட்பாளர்கள்

Election 

Election 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கிய நிலையில், ஜனவரி 31 ஆம் தேதிக்குப் பிறகு வேட்புமனுவை தாக்கல் செய்ய தேனி மாவட்டத்திலுள்ள பல வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர் 

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கிய நிலையில், ஜனவரி 31 ஆம் தேதிக்குப் பிறகு வேட்புமனுவை தாக்கல் செய்ய தேனி மாவட்டத்திலுள்ள பல வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் காத்திருந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான தேதியை அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்  ஜனவரி 28ஆம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், வேட்பு மனுக்கள் பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் எனவும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் பிப்ரவரி 7ஆம் தேதி எனவும் அறிவித்தது தேர்தல் ஆணையம்.

    அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்து இருந்தது.

    வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கிய நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஒரு சில இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுவை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4 ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கும் நிலையில், தேனி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் இதர கட்சிகள் மும்முரம் காட்டி வருவதால் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.


    மேலும், பிரதான கட்சி சார்பாக போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும் நேற்றும், இன்றும் வேட்புமனுவை தாக்கல் செய்ய முன்வரவில்லை.

    இதற்கு கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு, மற்றும் ஆவணங்கள் தயார் செய்வதில் தாமதம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.
    சில இடங்களில், ஆவணங்கள் உட்பட அனைத்தும் தயாராக இருந்தும், ஆன்மீக அடிப்படையில் நல்ல நாள் இல்லை என்ற காரணத்தினால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் சில வேட்பாளர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக நல்ல நாளன்று வேட்புமனு தாக்கல் செய்தால் தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியும் எனவும் சில வேட்பாளர்கள் நம்புவதாகவும் கூறப்படுகிறது

    அந்த வகையில், ஜனவரி 31-ம் தேதிக்கு பிறகு தேனி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வேட்பு மனுத்தாக்கல் தீவிரம் அடையும் என கூறப்படுகிறது. தை அமாவாசையை முன்னிட்டு பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள் நல்ல நாளைப் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருப்பது பேசுபொருள் ஆகியுள்ளது.


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி