தேனி : ஜமீன்தாரின் சிலையை சீரமைத்து தருவதாக முன்னாள் துணை சேர்மன் உறுதி
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் ராசி நாயக்கர் ஜமீன்தாரின் சிலை உடைக்கப்பட்டதில், சேதமடைந்த சிலை மற்றும் இதரப் பகுதிகளை போடி முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் தன்னுடைய சொந்த செலவில் சீரமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
சிலை உடைப்பு விவகாரம் :-
போடி நாயக்கனூர் பகுதியில் ராசி நாயக்கர் ஜமீன்தாரின் கோயில் உள்ளது. போடி நகர் ஜமீன்தார்கள் ஆளப்பட்ட புகழ் பெற்ற பகுதியாகும்.
இதில், ராசி நாயக்கர் மிகவும் புகழ்பெற்ற ஜமீன்தாராகவும் நீதிமானாகவும் கருதப்படுகிறார். இவர், வாழ்ந்த காலத்தில் கண்ணில்லாத பெண்ணுக்கு கண் கொடுத்ததால் , ஊர் மக்கள் அவரை கடவுளாக நம்பி வழிபட்டு வருகின்றனர்.
போடி நகரில் ஒரே கல்லால் ஆன தூணில் செதுக்கப்பட்ட திருவுருவச் சிலை, போடி முக்கிய நுழைவு பகுதியான பார்க் நிறுத்தம் அருகே சிறிய கோயிலாக நிறுவப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர் அதிகாலை வேளையில் ராசி நாயக்கரின் சிலையை சேதப்படுத்திய வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் மர்ம நபர் கற்களை தூக்கி கொண்டு ராசி நாயக்கர் சிலை உள்ள இடத்திற்குள் நுழைந்து அங்கு உள்ள நந்தி வாகனம், எலி வாகனம், சூலாயுதம் போன்றவற்றை சேதப்படுத்தியது பதிவாகியிருந்தது.
இந்த காணொளி குறித்து போடி காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், சிலையை சேதப்படுத்தியது கார்த்திக் என்ற ராணுவ வீரர் என்பது தெரியவந்தது.
ஆனால் கார்த்தி கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டதால், போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இதனைக் கண்டித்து , ராசி நாயக்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக ஊர்மக்கள் ஒன்றுகூடி சாலை மறியல் செய்து சிலையை சீரமைத்து தரவும் சேதப்படுத்திய நபரை கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், சேதமடைந்த ராசி நாயக்கர் சிலை மற்றும் இதர பகுதிகளை, போடி முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் சங்கர் சீரமைத்து தருவதாக கூறியுள்ளார். பணிகளுக்கான முழு செலவையும் தானே இருப்பதாக கூறி உள்ளதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதி அடைந்துள்ளனர் .
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.