போடிநாயக்கனூர் நகராட்சியில் 27-வது வார்டு
திமுகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது காங்கிரஸிற்கு அந்த வார்டு ஒதுக்கப்பட்டதால் திமுக வேட்பாளர் அதிர்ச்சி அடைந்து தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
போடியில் கடந்த சில நாட்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து இழுபறி ஏற்பட்டது.
இதனால், காங்கிரஸ் கட்சியினருக்கும், திமுகவுக்கும் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.
குறிப்பாக, போடி நகராட்சியில் காங்கிரஸார் தனித்து நிற்பதாக முடிவு செய்து 9 இடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு 2 வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு, 31 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இந்த சூழலில், காங்கிரஸிற்கும், திமுகவுக்கும் இடையே மீண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியினருக்கு 2 வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் போட்டியிடுவதாக அறிவித்த இரண்டு இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது .
காங்கிரஸ் மற்றும் திமுக இடையே ஏற்பட்ட திடீர் கூட்டணி உடன்படிக்கையால் 27-வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த 27 வது வார்டில் திமுக சார்பாக முருகம்மாள் என்ற பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
திமுக வேட்பாளருக்கு அதிகாரப்பூர்வமாக திமுக சின்னம் ஒதுக்கபடுவதற்கான ஏபிசி சான்றிதழை கொடுக்காமலும், திமுக வேட்பாளரை கட்சி சின்னத்தில் போட்டியிடுவதை தடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு அறிவிக்கப்பட்ட வார்டை காங்கிரஸிற்கு ஒதுக்கியதால் அதிருப்தி தெரிவித்து 27வது வார்டு திமுக வேட்பாளர் முருகம்மாள் தனது ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து போடி திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து உடனே விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் , அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு இடையே வேட்பாளர் முருகம்மாள் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
முருகம்மாள் உடன் வந்த உறவினர்களும் தொண்டர்களும் கட்சிக் கொடியை சாலையில் வீசி வாக்காளர் அட்டையையும் ரேஷன் கார்டையும் திரும்ப ஒப்படைக்க போவதாக கூறினர். இதனால் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.