தேனி : சமூக வலைதளம் பயன்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கும் காவல் துறை - முழு விவரம் உள்ளே
தேனி மாவட்டத்தில் மதநல்லிணக்கத்தை சீர் குலைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் எந்த ஒரு செய்தியையும் பரப்ப கூடாது எனவும், பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கிறது தேனி மாவட்ட காவல்துறை
மத நல்லிணக்கம் :-
தேனி மாவட்டத்தில் சில பகுதிகளில் சமீப காலமாக இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை நிலவி வருவதாக கூறப்படுகிறது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவது தொடர்ந்து நடைபெற்றதை காண முடிந்தது .
இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இறைச்சி கழிவுகளை கொட்ட வந்த ஒரு மதத்தினரை மற்றொரு மதத்தினர் தாக்கிய சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட மதத்தினை சார்ந்தவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சம்பவமும் நடைபெற்றது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக உரிய நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்து சிலர் போராட்டத்திலும் ஈடுபட முற்பட்டனர்.
இந்த சம்பவம் முடிவடையும் முன்பே கம்பத்தில் மற்றொரு சமூகத்தைச் சார்ந்த நபர்களை நால்வர் தாக்கிய சம்பவம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு மதத்தினரை மற்றொரு மதத்தினர் மிகவும் முகம் சுளிக்கும் வைக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் தொடர்ந்து பதற்றமான நிலைமை கம்பம் பகுதியில் நிலவியது. இதனால் கம்பம் பகுதி முழுவதும் காவல்துறை பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது .
காவல்துறையினர் எச்சரிக்கை :-
மேலும், மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக சில நபர்கள் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூரை பரப்பி வருகின்றனர். இதனால் மோதல் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
மாவட்டத்தில் தொடர் பதட்ட நிலையை குறைக்கவும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தேனி மாவட்ட காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, தேனி மாவட்டத்தில் ஒரு சமூகத்தையோ ஒரு மதத்தையோ ஒரு தனி நபரையோ அல்லது சமூக அமைதியை சீர்குலைக்கும் விதமாக அவதூறு அல்லது பொய் செய்தியை சமூக வலைதளங்களில் பரப்புவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் குறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மதநல்லிணக்கம் தொடர்பாகவும் அமைதியை சீர் குலைக்கும் விதமான செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.