Home /local-news /

கூடலூர் : நகராட்சி மீது அதிருப்தியில் ஆங்கூர் பாளையம் மக்கள் - கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல் 

கூடலூர் : நகராட்சி மீது அதிருப்தியில் ஆங்கூர் பாளையம் மக்கள் - கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல் 

Gudalur municipality 

Gudalur municipality 

கூடலூர் நகராட்சியின் கழிவு நீர்களை சுத்திகரிப்பு செய்து அதனை முல்லைப் பெரியாற்றில் கலக்கும் விதமாக சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

    கூடலூர் நகராட்சி சார்பில் அமைக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சிறு வாய்க்காலின் மேல் புறம் அமைக்க கூடலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் ஆங்கூர் பாளையம் மக்கள்.

    தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்று நீரைப் பயன்படுத்தி கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள ஆங்கூர் பாளையம் , சாமாண்டிபுரம், மஞ்சக்குளம் ஆகிய கிராமங்களுக்கு லோயர் கேம்ப் அருகே உள்ள வைரவனை ஆற்றுப் பிரிவில் இருந்து சிறு வாய்க்கால் மூலமாக முல்லைப் பெரியாறு தண்ணீர் பிரிக்கப்பட்டு இந்த கிராமங்கள் பாசன வசதி பெறுவதற்காக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த சிறு வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி கூடலூரை சுற்றி உள்ள கிராமங்களான ஆங்கூர் பாளையம், சாமாண்டிபுரம், மஞ்சக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் நெற்பயிர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 20 ஆண்டுகளாக இந்த வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தினால், வாய்க்கால் பாதை அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வாய்க்கால் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் இருந்தது . இந்த நிலையில், ஆங்கூர் பாளையம் பொதுமக்களின் முயற்சியால் சிறு வாய்க்காலில் ஆக்கிரமிக்கப்பட்டு வாய்க்காலுக்காண பாதை ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கூடலூர் நகராட்சியின் கழிவு நீர்களை சுத்திகரிப்பு செய்து அதனை முல்லைப் பெரியாற்றில் கலக்கும் விதமாக சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூடலூர் நகராட்சி இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஆங்கூர் பாளையம் அருகே உள்ள சிறு வாய்க்காலுக்கு கீழ்புறம் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது . இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வாய்க்காலில் மேல்புறம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செப்டம்பர் மாதம் நகராட்சி அலுவலகத்தில் மனுவாக அளித்திருந்தனர்

    ஆனால் தற்போது நகராட்சி திட்டமிடப்பட்ட பழைய இடத்திலேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதால், ஆங்கூர் பாளையம் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனை அடுத்து ஆங்கூர் பாளையம், சாமாண்டிபுரம், மஞ்சகுளம் ஆகிய கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு விளக்கத்தை கேட்க முற்பட்டனர்.

    அப்போது,  கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சிறு வாய்க்காலின் மேற்புறம் அமைக்க, தேர்வு செய்யப்பட்ட இடம் வேறு துறைக்கு சொந்தமான இடம் என்பதால் , சம்பந்தப்பட்ட துறைக்கு இடத்தை அளிக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக  நகராட்சி தரப்பில் தெரிவித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர் .

    மேலும் சிறு வாய்க்கால் வழியாக முல்லைப் பெரியாற்று தண்ணீரை ஆங்கூர் பாளையம் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுப்பணித்துறையினருக்கு ஆங்கூர் பாளையம் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், அப்பகுதி மீண்டும் விவசாயத்தில் செழிக்கும் என்ற கூறுகின்றனர் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி