தேனி : மேகமலை உட்பட சுற்றுலாத் தலங்களை மூடுவதற்கு ஆலோசனை
தேனி மாவட்டத்திலுள்ள மேகமலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், மேலே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் மீண்டும் மலைப்பகுதி மூடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களும் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கொரோனா பரவல் :-
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட சுகாதாரத்துறை, மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே மூடப்பட்டுள்ள சுருளி, கும்பக்கரை அருவி, சின்ன சுருளி ஆகியவை தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் சின்னமனூர் அருகே உள்ள மேகமலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் போது தற்காலிகமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது. சுற்றுலாப் பணிகளின் வருகை இல்லாதபோது மேகமலைக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள பிற சுற்றுலாத்தலங்களையும் மீண்டும் மூட பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மூடப்பட்ட மேகமலை பகுதியில் உள்ள ஹைவேவிஸ், மணலாறு, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு பகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட்டம் குறைவாக காணப்பட்டதால் மேகமலைக்கு அனுமதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது மீண்டும் மேகமலை பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது . கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மேகமலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கொரோனாத் தொற்று பரவல் தமிழகத்தில் முழுமையாக குறையும் வரையில் மேகமலை மூடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் . இன்று மேகமலை மீண்டும் மூடப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேகமலை காவல் கண்காணிப்பு சோதனைச் சாவடியில் உள்ள காவலர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.