தேனி : "மாணவர்களுக்கு பட்டம் வழங்க 5 முதல் ஆறு மாதங்களை போதுமானது என்ற யுஜிசி முடிவுக்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியக் குழு இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள்ளாக பட்டம் வழங்க வேண்டும் என சுற்றரிக்கை வழங்கியதற்கு கல்வியாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பல்கலைக்கழக மானியக் குழு :-
பல்கலைக்கழக மானிய குழுவானது இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, மாணவர்கள் உயர்நிலைக் கல்வியை முடித்து தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 180 நாட்களுக்குள்ளாக பட்டம் வழங்கப்பட வேண்டும். 180 நாட்களுக்குள் பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாணவர்களுக்கு தாமதமாக பட்டம் வழங்கப் படுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் படிப்பை முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இருந்து இன்றளவும் பட்டம் வழங்கப்படாமல் உள்ளது. 2020, 2021 ம் ஆண்டுகளில் கொரோனா பேரிடர் காலத்தில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் வழங்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பட்டம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக சில பல்கலைக்கழகங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு பின்னரும் கூட மாணவர்களுக்கான பட்டம் வழங்கப்படாமல் உள்ளது.
மாணவர்கள் சந்திக்கும் இன்னல்கள் :-
மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு கல்லூரி கட்டணம் செலுத்தாமல் இருப்பதால் அவர்களுக்கு பட்டம் வழங்காமல் கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைப்பதாக பல இடங்களில் குற்றச்சாட்டுகள் வருகிறது. இத்தகைய சூழலை தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் அதிகம் சந்திப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை குறித்து, பல கல்வியாளர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும் மாணவர்களுக்கு விரைவில் பட்டம் வழங்க சுற்றறிக்கை வழங்கியுள்ள யுஜிசியுன் முடிவுக்கு வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர் சுந்தர் கூறுகையில், " ஆறுமாதத்திற்கு உள்ளாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மாணவர் தேர்ச்சி பெற்ற தேதியில் இருந்து, 180 நாட்களுக்குள் அவருக்கு பட்டம் வழங்கப்படுவது கட்டாயமாகும். தேர்வு முடிவுகள் வெளியாகி, அதற்கான பட்ட சான்றிதழை தயார் செய்து மாணவர்களுக்கு வழங்க, 5 முதல் 6 மாதங்களே போதுமானது. இதுவே கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் பிரதான பணி.
யுஜிசியின் முடிவு
வரவேற்கத்தக்கது :-
தற்போதைய சூழலில் மாணவர்கள் உயர் கல்வியை நோக்கி செல்வதற்கு போட்டித் தேர்வு, நுழைவுத்தேர்வு உள்ளிட்டவைகளை கண்டு அஞ்சும் வேலையில் இதுபோன்ற அறிவிப்பு மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.
பட்டம் தாமதமாக வழங்குதல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கு பட்டம் உடனடியாக கிடைத்தால் தான் பணிக்கு சென்று கல்விக் கடனை செலுத்த முடியும். பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்குவதில் தாமதம் செய்வதாக நாடு முழுவதும் இருந்து ஏராளமான குற்றச்சாட்டுகள் யுஜிசி க்கு வந்த நிலையில் யுஜிசி எடுத்த இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கதே " என்றார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.