தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு மத்திய அரசின் தங்கப் பத்திர திட்டம் (Gold Bond Scheme) பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுவதால், பத்திரத்தில் முதலீடு செய்ய அஞ்சலகங்களில் தங்க பத்திரங்கள் பெற பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது
தங்க பத்திரம் :-
நடப்பு நிதியாண்டின் 10வது வரிசை தங்கப் பத்திர விற்பனை தேனி மாவட்டத்தில் உள்ள 45 அஞ்சல் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. மார்ச் 1 ம் தேதி தொடங்கிய விற்பனை மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் மூலம் தங்கத்தை பொருளாக வாங்காமல் பத்திர வடிவில் வாங்குவதால் முதலீட்டாளர்கள் தங்க விலையேற்ற பலனை பெற முடியும்.
தற்போதைய தங்க பத்திர விற்பனையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,109 ரூபாய் ஆக ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மட்டும் 2,414 கிராம் மதிப்புள்ள தங்கப்பத்திரங்கள் மூலம் 87 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டு தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியும், திட்டத்தின் முதிர்வு காலமான 8 ஆண்டுகளுக்கு பின்னர் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணத்தையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளளாம்.
ஒருவர் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பித்து தொகையை செலுத்துபவர்களுக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
தங்கத்தின் விலையை நீண்ட கால நோக்கில் கவனித்து வந்தால் அதன் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே தங்கத்தின் விலை உயர்வு பலனுடன் இரண்டரை சதவிகித வட்டியும் கிடைப்பதால் இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கியால் பத்திரங்கள் வெளியிடப்படுவதால் இத்திட்டம் நம்பகத்தன்மை வாய்ந்த முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது.
சுத்தமான தங்கத்தை பத்திர வடிவில் பெற நினைப்பவர்கள்
தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களுக்கு சென்று இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து ஆதார் அட்டை நகல் , பான் கார்டு நகல் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைத்துள்ள வங்கி கணக்கின் விபரங்களை அளித்து தங்க பத்திரங்களை பெற்று பயனடையலாம்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.