தேனி மாவட்டத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் மாவட்டம் முழுவதிலும் நாற்பத்தி மூன்று மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 2,306 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 முதல் தொடங்கி பிப்ரவரி 4ம் தேதிவரை நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளில் உள்ள 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, மற்றும் பிரதான கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதுவரை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சேர்த்து மொத்தம் 2,352 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. 6 நகராட்சியில் இருந்து பெறப்பட்ட 966 வேட்பு மனுக்களில் 11 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 22 பேரூராட்சிகளில் இருந்து பெறப்பட்ட 1,386 வேட்பு மனுக்களில் 32 வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் 1 வேட்புமனு மட்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இறுதியாக, நகராட்சிகளில் 955 வேட்பாளர்களும், பேரூராட்சிகளில் 1,351 வேட்பாளர்களும் என தேர்தலில் 2,306 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் .
கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக , அதிமுக, பாஜக மற்றும் இதர கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் என 182 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர் .
வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் சில வேட்பாளர்கள், எதிர் வேட்பாளர்கள் மீது ஆட்சபனை தெரிவித்ததால் குறிப்பிட்ட வார்டுகளில் வேட்புமனு ஏற்றுக்கொள்வதில் இழுபறி நீடித்தது.
பின்னர் இறுதியாக கம்பம் நகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 182 வேட்புமனுக்களில் 181 வேட்பு மனுக்கள் ஏற்கப் பட்டது. ஒரு வேட்பு மனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.