தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சித்திரையை முதல் நாளை முன்னிட்டு புனித நீராடவும், பூத நாராயணருக்கு நடைபெறும் பூஜை காணவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சுருளி அருவி :-
கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் மற்றும் ஆன்மீக ஸ்தலம் ஆகும். புகழ்பெற்ற இந்த அருவியில் குளிப்பதற்காக கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும், மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் குவிந்து வருகின்றனர்.
இதேபோல், சுருளியில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிகளும் தவம் புரிந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்கள் குலதெய்வ வழிபாடு, குடமுழுக்கு, ஊர் முக்கிய கோயில் திருவிழாக்கள் கொண்டாடுவதற்கு முன் இங்குள்ள பூதநாரயணன் கோயில், வேலப்பர் கோயில், கன்னிமார் கோயில்களிலும் வழிபட்டு தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.
சுருளியில் சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், தை பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விசேஷங்களில் இங்குள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வாழிபாடுகளும் நடக்கும்.
சித்திரை முதல் நாளான இன்று அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் குவியத் தொடங்கினர். கோவிலில் பூத நாராயணனுக்கு நடைபெற்ற பூஜையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர் .
சித்திரை மாதங்களில் தேனி மாவட்டங்களில் வீரபாண்டி மாரியம்மன் கோவில் திருவிழா, கம்பம் மாரியம்மன், மதுரை அழகர்கோவில் திருவிழா போன்ற திருவிழாக்களுக்கு பக்தர்கள் இன்று முதல் அருவியில் புனித நீராடி தங்களது விரத்ததை துவங்குவதற்கு ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் அருவிக்கு வந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாக்கள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அருவியில் நீராடி வருகின்றனர் .
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.