Home /local-news /

பிரபலமடைந்து வரும் ஸ்கேட்டிங் விளையாட்டு.. தேசிய போட்டிகளில் சாதிக்கும் கம்பம் பள்ளி மாணவர்கள்..

பிரபலமடைந்து வரும் ஸ்கேட்டிங் விளையாட்டு.. தேசிய போட்டிகளில் சாதிக்கும் கம்பம் பள்ளி மாணவர்கள்..

Skating

Skating students 

Thei | தேனி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் ஸ்கேட்டிங் விளையாட்ட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆர்வம் ஏற்பட்டு உள்ளதால், மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக்கொண்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர்.

    பிரபலமடைந்து வரும் ஸ்கேட்டிங் விளையாட்டு.. தேசிய போட்டியில் சாதிக்கும் கம்பம் பள்ளி மாணவர்கள்..

    தேனி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் ஸ்கேட்டிங் விளையாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆர்வம் ஏற்பட்டு உள்ளதால், மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக்கொண்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர்.

    ஸ்கேட்டிங் விளையாட்டு :-

    கோடை காலத்தில் மாணவ மாணவிகளின் பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாணவ மாணவிகளின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை ஏதேனும் ஒரு விளையாட்டுப் பயிற்சியிலோ அல்லது கல்வி சார்ந்த ஏதேனும் ஒரு பயிற்சியிலேயோ சேர்த்து விடுவது வழக்கம்.

    பள்ளி செயல்படும் நாட்களிலும் விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் பெரும்பாலும் கிரிக்கெட் கோக்கோ, கால்பந்து, எரிபந்து, கைப்பந்து, கூடைப்பந்து, போன்றவைகளை தெரிந்தெடுத்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெறுவர்.

    சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற பெருநகரங்களில் ஸ்கேட்டிங் விளையாட்டில் பலர் ஆர்வமாக இருப்பது போல, தேனி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு மீது பலருக்கும் ஆர்வம் இல்லாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் அந்த விளையாட்டு பற்றிய புரிதலும் இல்லாமல் இருந்தது.

    இரு கால்களிலும் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு , ஸ்கேட்டிங் செய்யும் போது வானில் பறக்கும் அனுபவத்தை தரும் ஸ்கேட்டிங் விளையாட்டு பற்றிய ஆர்வமும் புரிதலும் தற்போது தேனி மாவட்ட மக்களிடையே படிப்படியாக ஏற்படத் தொடங்கியுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்கேட்டிங் பற்றிய பெரிதும் புரிதல் இல்லாமல் இருந்த தேனி மாவட்டத்தில் தற்போதைய பெரும்பாலான பள்ளிகளில் ஸ்கேட்டிங் விளையாட்டும் சேர்க்கப்பட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஆர்ஆர் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியின் ஸ்கேட்டிங் பயிற்சியாளரான ராஜேஷ், தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஸ்கேட்டிங் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பள்ளி மாணவ மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறார்.

    தினசரி காலை, மாலை என இருவேளைகளிலும் சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறார் ராஜேஷ். இவரின் தொடர் முயற்சியால் கடந்த 5 ஆண்டுகளில் தேனி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் பெரும் அளவில் கவனிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.

    ஸ்கேட்டிங் ரேஸ் மட்டுமில்லாமல், ரோலர் பேஸ்கட் பால், ரோலர் த்ரோபால், ரோலர் கொக்கோ, ரோலர் வாலிபால் போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார் ராஜேஷ். RR ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியில் ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலை மாலை என இருவேளைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    முறையான மைதான வசதி இல்லாததால் காலை வேளையில் கம்பம் குமுளி சாலையின் அருகே உள்ள காலி வீட்டு மனை இடத்தில் ஸ்பீட் ரைஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாலை வேலையில் கம்பம் புதுப்பட்டி யில் உள்ள RR இன்டர்நேஷனல் பள்ளி கூடைப் பந்து மைதானத்தில் ரோலர் கேம்ஸ் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    மைதானம் தேவை :-

    தற்போது தேனி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற முறையான மைதானம் இல்லாத நிலையில், இருக்கும் இடத்தில் பயிற்சி பெற்றுக் கொண்ட மாணவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்று தேசிய அளவிலான போட்டியில் கம்பம் RR ரோலர் கட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவனான ஜெகதீஷ் 3 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். அதே போல இங்கு பயிற்சி பெற்ற பெரும்பாலான மாணவர்கள் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ரோலர் கிரிக்கெட், ரோலர் பேஸ்கட் பால் போன்ற விளையாட்டுகளில் பங்கு பெற்று பல்வேறு விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

    தற்போது முறையான மைதான வசதி இல்லாமல் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள், அரசு சார்பில் மைதானம் ஏற்படுத்திக் கொடுத்தால் கூடுதல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து பல்வேறு தேசிய போட்டிகளில் பங்கு பெற்று டைட்டில் அடிக்க முடியும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    மேலும் தற்போது RR ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் சார்பாக நடைபெறவுள்ள தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்பதற்காக மாணவர்களுக்கு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி :-

    இதுபற்றி ஸ்கேட்டிங் பயிற்சியாளரான ராஜேஷ் கூறுகையில் , “ஸ்கேட்டிங் விளையாடும்போது ஏற்படும் ஒருவித உற்சாகம், புத்துணர்ச்சி, மகிழ்ச்சி போன்றவை வேறு எந்த , விளையாட்டிலும் நமக்கு ஏற்படாது. தற்போது தேனி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் பெருமளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. பல்வேறு மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்று வருகின்றனர். பெரும்பாலான ஆங்கில வழி கல்வியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஆர்வமாக ஸ்கேட்டிங் விளையாட்டில் உள்ளனர்.

    அரசுப் பள்ளி மாணவர்களிடையே இந்த விளையாட்டு பற்றிய போதிய புரிதல் இல்லை. அதனை எனது நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களிடமும் வெளி வட்டாரங்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அரசு பள்ளி மாணவர்களையும் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபடுத்த முயற்சி எடுத்து வருகிறேன்.

    தற்போது என்னிடம் ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் மாணவர்கள் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டியில் பங்கேற்ற வெற்றியும் பெற்றுள்ளனர். தற்போது மே மாதங்களில் கோடை கால பயிற்சி வகுப்பும் தொடங்கி நடைபெற்று வருகிறது” என்றார்

    இதுகுறித்து ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், “மற்ற மாணவர்களைப் போல எங்களின் பிள்ளைகளும் ஸ்கேட்டிங் விளையாட்டில் பயிற்சி பெற்று வெற்றி பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தேனி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல மாணவர்களும் ஆர்வமாக சேர்ந்து வருகின்றனர். மாணவர்கள் பலரும் ஆர்வமாக உள்ளதால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க போதிய இடவசதி தேனி மாவட்டத்தில் இல்லை.

    மாணவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தவும் ஸ்கேட்டிங் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகவும் அரசு சார்பில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைத்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்” என்றனர்.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Government school, School students, Theni

    அடுத்த செய்தி