Home /local-news /

தேனி : நெற்பயிரைத் தாக்கும் எலிகள்... அதிகாரிகள் தலையிட விவசாயிகள் கோரிக்கை

தேனி : நெற்பயிரைத் தாக்கும் எலிகள்... அதிகாரிகள் தலையிட விவசாயிகள் கோரிக்கை

பயிரை எலி தொல்லையில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மூங்கிலால் செய்யப்பட்ட இடுக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைத்து எலிகளைப் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர் விவசாயிகள்.

பயிரை எலி தொல்லையில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மூங்கிலால் செய்யப்பட்ட இடுக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைத்து எலிகளைப் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர் விவசாயிகள்.

பயிரை எலி தொல்லையில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மூங்கிலால் செய்யப்பட்ட இடுக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைத்து எலிகளைப் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர் விவசாயிகள்.

    தேனி மாவட்டத்தில் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், வயல்வெளிகளில் எலித் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் வேளாண்துறை அதிகாரிகள் தலையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    நெல் சாகுபடி :-

    தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை உள்ள 14,707 ஏக்கர் ஆயக்கட்டு பகுதியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் நீர் மூலமாக இரு போக நெல்சாகுபடி செய்யப்படுகிறது .

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி விவசாயிகள் விரைவாக இரண்டாம் போக நெல் சாகுபடியை தொடங்கினர். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

    எலித் தொல்லை :-

    இந்த ஆண்டு சரியான நேரத்தில் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் இரண்டு போகம் முழுமையாக செய்ய முடியும் என்ற நோக்கில், விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை தொடங்க ஆரம்பித்தனர். கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் போக சாகுபடி துவங்கிய நிலையில் தற்போது பயிர் 70 - 80 நாள் பயிர்களாக உள்ளது.

    இந்த நிலையில், நெற்பயிர்களை எலிகள் நாசம் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எலித் தொல்லை அதிகமாக இருப்பதால் பயிர் உரிய மகசூலை அடைய வாய்ப்பு குறைவு எனவும், முதல்போக சாகுபடியில் உரிய லாபத்தை எட்ட முடியாத நிலையில் இரண்டாம் போக சாகுபடியிலும் எலி தொல்லை இருப்பதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்படும் என்கின்றனர் விவசாயிகள்.

    இதனால், பயிரை எலி தொல்லையில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மூங்கிலால் செய்யப்பட்ட இடுக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைத்து எலிகளைப் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர் விவசாயிகள்.

    மூங்கிலால் செய்யப்பட்ட இந்த இடுக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைத்து விட்டு அதனை சுற்றியும் எலிகளின் உணவாகிய நிலகடலை பருப்பு, தேங்காய், அரிசி, நெல், ஆகியவற்றை கலந்து முதல் நாள் இரவு வைபதன் மூலம் வயல் வெளிகளை சேதப்படுத்தும் எலிகள் அனைத்தும் இடிக்கியில் சிக்குகிறது என்கிறனர் விவசாயிகள்.

    ஆனால் இவை நிரந்தர தீர்வைத் தராது. இதனால் வேளாண்துறை அதிகாரிகள் நிரந்தர தீர்வை எட்டும் வகையில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    இது குறித்து கம்பம் சுற்றுவட்டார விவசாயிகள் கூறுகையில்,
    " வயல்வெளிகளில் எலித் தொல்லை இந்த முறை அதிகமாக இருக்கிறது. இதனை போக்கும் வகையில் எலி இடிக்கிககளை வைத்து, எலியை பிடித்தாலும், இது தற்காலிக தீர்வுதான் . வேளாண்துறை அதிகாரிகள் தலையிட்டு இதற்கு வழிவகை செய்ய வேண்டும் " என்றனர் .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Farmers, Theni

    அடுத்த செய்தி