தேனி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் துணிப்பையை பயன்படுத்துவதை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
பிளாஸ்டிக் விழிப்புணர்வு :-
பசுமைமிக்க மாவட்டமாக தேனி மாவட்டம் மாறுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு கழிவாகும் பிளாஸ்டிக் பொருட்கள் இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் முதல் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைந்த அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூறு சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் தேனி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்குவது குறித்தும், மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கூறுகையில், \"உணவகங்கள், கடைகளுக்குச் செல்லும்போது துணி பை எடுத்துச் செல்வது கட்டாயம். பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு, பொது மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்திற்குள் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க இணைந்து செயல்பட வேண்டும் \" என வேண்டுகோள் விடுத்தார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.