Home /local-news /

உத்தமபாளையம் : பிங்க் அக்டோபர் - கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உத்தமபாளையம் : பிங்க் அக்டோபர் - கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Pink

Pink October month

உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில், அரசு மருத்துவர் பாரதி தலைமையிலான குழு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில், அரசு மருத்துவர் பாரதி தலைமையிலான குழு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    பிங்க் அக்டோபர் மாதம் :-

    மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதம் முழுவதும் பிங்க் அக்டோபர் என்ற பெயரில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பிங்க் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் அனுசரிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிங்க் அக்டோபர் மாதத்தில், குறிப்பாக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    2020 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புற்று நோயால் உயிரிழந்துள்ளனர்.

    பெண்களுக்கு முதலில் தாக்கும் புற்றுநோயாக இந்த மார்பக புற்றுநோய் இருந்து வருகிறது. மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்பதற்காக உலக சுகாதார நிறுவனம் சார்பில் இந்த பிங்க் அக்டோபர் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    விழிப்புணர்வு :-

    இந்த நிலையில், உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் அதிகம் பயிலும் கல்வி நிறுவனங்களில், உத்தமபாளையம் அரசு மருத்துவர் பாரதி தலைமையிலான மருத்துவக் குழு, பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் உத்தமபாளையத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், பயிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் பிங்க் அக்டோபர் மாதம் அனுசரிக்கப்படும் நோக்கத்தையும் எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து அரசு மருத்துவர் பாரதி கூறுகையில்,  “அக்டோபர் 1 முதல் 31ம் தேதி வரை பிங்க் அக்டோபர் மாதம் ஆக உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது அனுசரிக்க படுவதற்கு முக்கிய நோக்கம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.

    இதனை உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் எனது தலைமையிலான குழு உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பிபிடி முறையில் வகைப்படுத்தி மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும், மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனையை பெண்கள் அவர்களாகவே வீட்டில் எவ்வாறு செய்து பார்ப்பது என்ற சோதனை முறையும் கற்பிக்கப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் மார்பக புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோய் எவ்வாறு மனிதனை தாக்குகிறது மற்றும் அதில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது போன்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள் அவர்களாகவே புற்றுநோய் குறித்த பரிசோதனை செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல் இதர நண்பர்களுக்கும் கற்பிப்பர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Breast cancer, Theni

    அடுத்த செய்தி