Home /local-news /

தேனியில் நைட்டிங்கேல் சிலை வைக்க எதிர்ப்பு - யார் இவர்? முழு விவரம் இதோ!

தேனியில் நைட்டிங்கேல் சிலை வைக்க எதிர்ப்பு - யார் இவர்? முழு விவரம் இதோ!

Nightingale

Nightingale

Florence Nightingale | தமிழகத்தில் நைட்டிங்கேல் பற்றி 2020ம் ஆண்டுகளுக்கு முன்பாக பெருமளவில் பேசப்படாத நிலையில், 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களை கௌரவப்படுத்தும் விதமாக நைட்டிங்கேல் வரலாறு பெரிதும் பேசப்பட்டது

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  உரிய அனுமதி பெறாமல் அடுத்தமாதம் நடைபெற உள்ள செவிலியர் தினத்திற்காக நைட்டிங்கேல் அம்மையார் சிலை அமைக்க பூமிபூஜை போட்டதாக அரசு செவிலியர் கண்காணிப்பாளர் மீது புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நைட்டிங்கேல் யாரென்று தேனி வாசிகள் சமூகவலைதளங்களில் தேடி வரும் நிலையில் அதனைப் பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

  தேனி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி அந்த சர்ச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பாக விளக்கம் அளிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வரும். அந்த வகையில் தற்போது மற்றொரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர்களின் தாய் என்று அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சிலையை நிறுவுவதற்கான பூமிபூஜை நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

  அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் தினம் கொண்டாடுவதற்காக நைட்டிங்கேல் சிலையை செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகளின் குடியிருப்புக்கு அருகே நிறுவ, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு செவிலியர் கண்காணிப்பாளர் முயற்சித்து அதற்கான பூமி பூஜை கடந்த வாரம் போட்டதாகவும் இப்பணிக்காக ஒவ்வொரு செவிலியரிடம் தலா இரண்டாயிரம் ரூபாய் கட்டாய வசூல் செய்ததாகவும் தேனி அரசு மருத்துவ செவிலியர் கண்காணிப்பாளர் ஜோஸ்மின் ஜென்னி மீது புகார் எழுந்தது.

  இதையடுத்து நைட்டிங்கேல் சிலையை நிறுவுவதை எதிர்த்து இந்து எழுச்சி முன்னணி சார்பில் இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை வளாகத்தில் அரசு அனுமதியின்றி எந்த ஒரு சிலையும் நிறுவ அனுமதிக்கமாட்டேன் என்வும், செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது.

  யார் இந்த நைட்டிங்கேல்? :-

  இங்கிலாந்து நாட்டில் மிகவும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் - பிரான்சிஸ் என்ற தம்பதியின் மூன்றாவது குழந்தையாக 1820-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பிறந்தார் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.

  Nightingale


  இவரின் சிறுவயதிலிருந்தே செவிலியர் பணியின் மீது உண்டான நேசம் காரணமாக, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறியும் 1844-ம் ஆண்டு, ஜெர்மனியின் கைசர்வெர்த்தில் உள்ள பாஸ்டர் பிளைட்னரின் லூத்தரன் மருத்துவமனையில் செவிலியர் மாணவியாக சேர்ந்து படிப்பை முடித்து, 1850-ம் ஆண்டு, லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிய தொடங்கினார். நைட்டிங்கேல் திறம்பட பணியாற்றியதால் அவரது முதலாளி கவனம் பெற்று குறைந்த காலத்திற்குள்ளாகவே கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

  ஒட்டோமான் பேரரசைக் கட்டுப்படுத்த ரஷியாவிற்கு எதிராக பிரிட்டிஷ் அரசு 1853-ம் ஆண்டு கிரிமியன் போரில் ஈடுபட்டது. இந்த போருக்காக ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் கருங்கடலுக்கு அனுப்பப்பட்டனர். போரில் போரிட்ட வீரர்களில் 18 ஆயிரம் வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பெண்கள் செவிலியர்கள் பணி செய்ய எதிர்ப்பு கிளம்பியது. இந்த நடைமுறைக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டவர் நைட்டிங்கேல்.

  செவிலியரின் சிறப்பான பணி :-

  1854 ஆம் ஆண்டு போர் செயலாளர் சிட்னி ஹெர்பெர்ட்டின் உத்தரவின்படி 34 செவிலியர்களைக் கொண்ட ஒரு குழுவை கூட்டி, கிரிமியாவிற்கு சென்று படுகாயமடைந்த போர் வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். நைட்டிங்கேல் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதால் மருத்துவமனையில் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது. இவருடைய சேவையை பாராட்டி 1883-ம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்க விருது வழங்கப்பட்டது.

  ’தி லேடி வித் தி லாம்ப்’ அதாவது கைவிளக்கு ஏந்திய தேவதை என்றும் அழைக்கப்படுகிறார் நைட்டிங்கேல். செவிலியர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன செவிலியர்களின் அமைப்பின் நிறுவனராகவும், ‘கிரிமியன்’ போரின் போது ஒரு செவிலியராக அவரது பணியை தொடங்கினார். அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் செவிலியர்களுக்கான நைட்டிங்கேல் பயிற்சிப் பள்ளியை 1860-ம் ஆண்டு நிறுவி ஆயிரக்கணக்கானோரை செவிலியராக்கினார். அவர் பிறந்து 200-வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி செவிலியர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

  அங்கீகாரம் :-

  84-வது வயதில் இங்கிலாந்து நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் மெரிட்’ விருதினைப் பெற்றார் நைட்டிங்கேல். இறுதியாக மருத்துவத் துறையில் செவிலியராக பல நல்ல பணிகளை செய்து 1910-ம் ஆண்டு மரணித்தார். அவருடைய மறைவுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந்தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் விளக்கு ஏற்றப்படுகிறது . மே மாதம் 12ஆம் தேதி செவிலியர்களின் தாய் என்று அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தநாளை உலகம் முழுவதும் செவிலியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  தமிழகத்தில் நைட்டிங்கேல் பற்றி 2020ம் ஆண்டுகளுக்கு முன்பாக பெருமளவில் பேசப்படாத நிலையில், 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களை கௌரவப்படுத்தும் விதமாக நைட்டிங்கேல் வரலாறு பெரிதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: சுதர்ஸன்
  Published by:Arun
  First published:

  Tags: Theni

  அடுத்த செய்தி