அதிகரிக்கும் கொசு தொல்லையை கட்டுப்படுத்த ஆயில் பால் தயாரித்து கொசுவின் உற்பத்தியை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது, சின்னமனூர் நகராட்சி நிர்வாகம்.
ஆயில் பால் முறை :-
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் திறந்த வெளிகளில்
தேங்கியிருக்கும் கழிவு நீரில் கொசுக்கள் முட்டை
இடுவதை தடுக்கும் வகையில் ஆயில் பால் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
பல்வேறு நோய்த் தொற்றுகளை பரப்பும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், கொசுக்களை கட்டுப்படுத்த சின்னமனூர் நகராட்சி புதிய முயற்சியை கையாண்டுள்ளது.
நீரை உறிஞ்சக்கூடிய உமி மற்றும் மரத்தூளை வெள்ளை
துணியில் கட்டி, கழிவு ஆயிலில் ஊற வைத்து எடுப்பது ஆயில் பால் ஆகும். இந்த ஆயில் பால் கழிவு நீரை உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டது. இதனை தண்ணீரில் விடும்போது அதில் உறிஞ்சப்பட்ட ஆயில் சிறிது சிறிதாக வெளியேறும். பொதுவாக எண்ணை உள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவது இல்லை .
நீர் தேங்கியிருக்கும் இடத்தில் ஆயில் பால் துணியை வைக்கும் பட்சத்தில் அவை நீருடன் கலந்து ஊறிக்கொண்டே
10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை துணியில் கட்டி போட்ட ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டே இருக்கும். கொசு அந்த இடத்தில் முட்டையிட வாய்ப்பில்லை.
இதனால் சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் ஆயில் பால் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது . ஆயில் பால் முறை மூலம் கொசுக்களை ஒழிப்பது நல்ல பலனை தரும் என்கிறார் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன்.
மேலும், ஆயில் பாலை கழிவு நீரில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் தண்ணீரில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த சின்னமனூர் நகராட்சியில் கொசு முட்டைகளை உண்ணும் கம்பூசியா மீன்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த மீன்கள் கொசு முட்டைகளை உணவாக உண்பதால் நன்னீரில் கொசு உற்பத்தி தடுக்கப்படும். இந்த மீன்கள் நகராட்சி அலுவலகத்தில் வளர்க்கப்பட்டு சின்னமனூர் மக்களுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.