தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் ஆண்டவர் என்னும் நபர் கை வைத்திய முறையில், பலருக்கு உடலில் நரம்பு மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு அளித்து வருவதால் பலர் இவரை நாடி வருகின்றனர்.
சுளுக்கு :-
பொதுவாக குழந்தைகள் விளையாடும் போதும் பெரியவர்கள் கடினமான வேலையை செய்யும்போது நரம்புகள் பிடிப்பு மற்றும் கை கால்களில் இடறி எலும்பு உடைதல் போன்ற நிகழ்வுகள் எதிர்பாராவிதமாக நடப்பது உண்டு. அதிக பாரத்தை தூக்கும் போதும் திடீரென நரம்பு சுருண்டு நரம்பு பிடித்துக்கொள்வது இயல்பாக நடப்பது உண்டு. அப்போது ஏற்படும் வலியை பெரும்பான்மை நபர்களால் பொறுக்க முடியாது. இதற்கு தீர்வாக சுளுக்கு எடுப்பதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விலக முடியும்.
அவ்வாறு சுளுக்கு எடுப்பது மற்றும் உடைந்த கையை கட்டுவதில் பலர் சிறந்து விளங்குவர் அந்த வகையில் ,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள குரும்பம்பட்டி என்ற அம்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டவர். இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேல் சுளுக்கெடுக்கும் தொழிலை செய்து வருகிறார். இவரின் தாத்தா காலம் முதல் பரம்பரை பரம்பரையாக சுளுக்கெடுக்கும் தொழில் செய்து வருவதாகக் கூறுகிறார் . உத்தமபாளையம் பகுதியில் தற்போது சுளுக்கு எடுப்பதில் மிகவும் கைதேர்ந்தவர் ஆக உள்ளார்.
இவர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நரம்பு தொடர்பாகவும், எலும்பு தொடர்பாகவும், கழுத்து வலி போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு கை வைத்தியம் மூலம் தீர்வு அளிப்பதால் பலர் இவரை நாடி வருகின்றனர். இவர் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் சென்னை, பாண்டிச்சேரி, விழுப்புரம் போன்ற வெளி நகரங்களுக்கும் சென்று சுளுக்கு எடுத்து வருகிறார். தினமும் இவருக்கு செல்போன் எண்ணுக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுளுக்கெடுக்கும் ஆண்டவர் என்றால் பலரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர் சுமார் 25 ஆயிரம் நபர்களுக்கு மேல் சுளுக்கு எடுத்து அனைவரையும் குணப்படுத்துவதாக கூறுகிறார்.
இதுகுறித்து, உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆண்டவர் கூறுகையில், " முதலில் எனது தாத்தா இந்த தொழிலைத் தொடங்கினார். ஆடு மாடுகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு கை வைத்திய மூலம் தீர்வு அளித்த எனது தந்தை பின்னர், கை வைத்தியம் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் சுளுக்கு தொடர்பாக பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க தொடங்கியதை தொடர்ந்து, நானும் இந்த தொழிலை கற்றுக்கொண்டேன்.
இந்த சுளுக்கு எடுக்கும் முறையை நாங்கள் தயாரித்த மூலிகை எண்ணை மூலம் செய்து வருகிறோம். குப்பைமேனி , பொட்ட கல்லி அருகம்புல், தை வாழை போன்ற மூலிகைகளை உள்ளடக்கிய எண்ணெய் தயாரித்து சுளுக்குகளை எடுத்து வருகிறோம். கழுத்து, இடுப்பு வலி இடுப்பு எலும்பு வலி, நரம்பு சுருள், ஜவ்வு விலகல், கை கால் உடைந்தால் அவற்றை கட்டுவது போன்ற பல பிரச்சினைகளுக்கு கைவைத்தியம் மூலம் தீர்வு அளித்து வருகிறோம்.
இந்த கை சிகிச்சை முறையில் உடனடி தீர்வு கிடைப்பதால் அதிகளவிலான நபர்கள் எங்களை நாடி வருகின்றனர். இதற்காக நாங்கள் எந்த ஒரு பணமும் பெறுவதில்லை. இதனை சேவையாக செய்கிறோம். பயன் பெற்றவர்கள் விருப்பத்தின் பெயரில் ஏதோ கொடுக்கும் பணத்தை மட்டுமே பெற்றுச் செல்கிறேன்\" என்றார்
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.