தேனி : கள்ள நோட்டுகளை அச்சிட்ட நபர் கைது - 87 ஆயிரத்து 810 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கள்ள நோட்டு அச்சிட்டு பயன்படுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 87 ஆயிரத்து 810 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
கள்ள நோட்டுகள் புழக்கம் :-
தேனி மாவட்டம் கம்பம் நகர்ப் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கம்பம் பகுதியில் பல பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து பணிகளையும் கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தினர்.
கம்பம் நெல்லுக்குத்தி புளிய மரப் பகுதியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையில் போலிசார் நேற்றிரவு ரோந்து பணிமேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டப பகுதி அருகே சந்தேகப்படும்படியாக நடந்து வந்த நபரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை செய்யப்பட்ட நபர் முன்னுக்கு பின் முரணாக காவல்துறை அதிகாரியிடம் பேசியுள்ளார்.
மேலும் அவர் அனுமதியுடன் அவரை பரிசோதனை செய்ததில் அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுக்கள் ஒரே வரிசை எண் கொண்ட ஜந்து 100 ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே வரிசையில் கொண்ட ஐந்து 100 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததால் அவர் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடும் நபராக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.
பின்னர் விசாரணையில் கம்பம் அருகே உள்ள சாமான்டிபுரம் கிராமப் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் மகன் 35 வயதாகும் குணசேகரன் என்பது தெரிய வந்தது. மேலும் அவரை போலிசார் விசாரணை செய்ததில் அவர் கடந்த நான்கு மாதங்களாக தனது மனைவிக்கு கூட தெரியாமல் வீட்டில் வைத்து கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார்
அவரிடமிருந்த 87 ஆயிரத்து 810 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களையும் இரண்டு ஜெராக்ஸ் கலர் பிரிண்ட் மிஷின்களையும், ரூபாய் நோட்டுக்களை வெட்டுவதற்கு உதவிய இரண்டு கட்டிங்மிஷின்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும்
ரூ 6800 கட்டிங் செய்யப்படாத நோட்டுக்களையும் கைப்பற்றி கம்பம் தெற்கு காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.