ஹோம் /Local News /

திருவிழாக்களால் தேர்வு நேரத்தில் படிக்க முடியாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள்!

திருவிழாக்களால் தேர்வு நேரத்தில் படிக்க முடியாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள்!

Speakers  

Speakers  

Theni District: சித்திரை மாதத்தில் கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில், திருவிழாக்களில் போடப்படும் அதிக சத்தத்துடன் கூடிய பாடல்களால் திருவிழா நேரத்தில் தேர்வுக்கு படிக்க முடியாமல் பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர் .

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் பெரும்பாலும் பங்குனி, சித்திரை மாதங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். கோடை காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் ஊர் பகுதிகளில் வெப்பம் தணிந்து மழைப்பொழிவு ஏற்பட வேண்டியும், சித்திரை மாதம் தமிழ் மாதத்தின் தொடக்கம் என்பதாலும், கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் காலத்தில் பொதுமக்களுக்கு அம்மை, ஒவ்வாமை போன்ற தொற்றுநோய்கள் வராமல் இருப்பதற்காகவும் கிராமம் மற்றும் நகரப் பகுதியில் உள்ள சிறிய கோயில் முதல் பெரிய கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது வழக்கம்.

  கிராமப்பகுதிகளில் பங்குனி சித்திரை மாதம் என்றாலே , திருவிழாக்கோலம் களைகட்டும். எங்கு திரும்பினும் ஏதேனும் ஒரு சமுதாய கோயிலோ அல்லது ஊர் பொதுமக்கள் ஒன்றாக வழிபடும் பெரிய கோயிலில் திருவிழா நடைபெற்று வருவதை காண முடியும். கோயில் திருவிழாக்களில் பொதுமக்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக அக்னி சட்டி எடுத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடனை செலுத்துவது உண்டு.

  திருவிழா  காலகட்டத்தில் ஊர்ப் பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டும், மேளதாளங்கள், பட்டாசுகளுடன் ரம்மியமாக கொண்டாடப்படும். தேனி மாவட்டத்திலும் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், போடி பத்ரகாளிபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் கோயில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

  தமிழ் மாதமான பங்குனி, சித்திரை பொதுவாக ஆங்கில மாதமான ஏப்ரல் மே மாதங்களில் வரும். இந்த காலகட்டத்தில்தான் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இறுதியாண்டு தேர்வுகளும் நடைபெறும்.

  இறுதியாண்டு தேர்வு :-

  அதன்படி இந்த ஆண்டு 10, 11, & 12ம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை இறுதியாண்டு தேர்வு நடைபெற உள்ளது.

  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஊர் திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்க படாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தோற்றுப் பரவல் குறைந்ததை அடுத்து திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி அளித்தது. இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு பிரம்மாண்டமாக திருவிழாவை நடத்த வேண்டும் என்பதற்காக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிக சத்தம் எழுப்பக் கூடிய ஒலி பெருக்கிகள் மற்றும் மேளதாளங்களுடன் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

  இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாத மாணவர்கள், தற்போது பள்ளிக்கு முழுநேரம் சென்று முழுஆண்டு தேர்வு நேரத்தில் முழுமையாக கவனம் செலுத்தி படித்து வரும் நேரத்தில் திருவிழாக்களில் போடப்படும் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிபெருக்கிகளால் படிக்க முடியாமல் கவனச்சிதறலால் தவித்து வருகின்றனர் பள்ளி மாணவர்கள்.

  குறிப்பாக தேர்வு மையங்களுக்கு அருகிலும் கூட ஒலிப்பெருக்கியின் சத்தம் இருப்பதால் முழு கவனத்துடன் தேர்வு எழுத முடியாமலும் தவித்து வருகின்றனர்.

  கட்டுப்பாடு அவசியம் :-

  காவல்துறையினர் கோவில் திருவிழாக்களை நடத்தும் விழா கமிட்டியினருக்கு ஒலிபெருக்கிகளில் பாடல்கள் போடுவதற்கு சில குறிப்பிட்ட வரம்புகளும் காலக்கெடுவை விதித்து இருந்தாலும்கூட பல்வேறு பகுதிகளில் இது மீறப்பட்டு தான் வருகிறது.

  மாணவர்கள் முழுமையாக கவனம் செலுத்தி படித்து தேர்வு எழுத வேண்டி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் திருவிழா விழா கமிட்டியினருக்கு குறைந்த சத்தத்துடன் ஒலிபெருக்கிகளை அமைத்து திருவிழாவை நடத்த வேண்டும் எனவும், காவல்துறையினர் மேலும் கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  செய்தியாளர் : சுதர்ஸன்

  Published by:Arun
  First published:

  Tags: Theni