Home /local-news /

இன்றைய (29.04.22) தேனி மாவட்ட முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

இன்றைய (29.04.22) தேனி மாவட்ட முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Mk stalin 

Mk stalin 

மூவருக்கு ஆயுள் தண்டனை, முதலமைச்சருக்கு தயாரான விருந்தினர் மாளிகை உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் இன்றைய செய்திகளின் தொகுப்பு (29/4/22).

    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில்...

    சுருளி அருவியில் நீர்வரத்து குறைவு :-

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை இன்றி கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து கடும் வெப்பம் நிலவுகிறது. தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. ஒருசிலர் மட்டுமே நின்று குளிக்கும் அளவு தண்ணீர் விழுவதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக குறைந்துள்ளது. மேகமலை பகுதியில் மழை பெய்தால் மட்டுமே, சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்றும், தற்போது மழை இல்லாதாதல் நீர்வரத்து குறைந்துள்ளதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

    ஹால்மார்க் முத்திரை :-

    தேனி ராமநாதபுரம் உட்பட 32 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை செய்யும் திட்டம் செயல்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \"இந்திய தர நிர்ணய அமைவனம் தங்க நகைகளுக்கு 'ஹால்மார்க்' முத்திரையை கட்டாயமாக்கியது. அந்த வகையில், நாட்டின் 256 மாவட்டங்களில் உள்ள மையங்கள் மூலம், தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தலான பொருள்கள் எச்யுஐடி (HUID) முத்திரையுடன் ஹால்மார்க் செய்யப்பட்டுவருகின்றன.

    இந்த நிலையில், மேலும் 32 புதிய மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை செய்யும் திட்டம் செயல்பட உள்ளது. இதன்படி தமிழ்நாட்டின் தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஹால்மார்க் மையங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டத்தில் தேர்வாகியுள்ள மாவட்டங்களின் பட்டியல் மற்றும் கூடுதல் விவரங்கள் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) www.bis.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் வருகை :-

    நாளை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை புரிந்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். தமிழக அரசு சார்பில், தேனி மாவட்டத்தில் தேனி நகர் மற்றும் பெரியகுளம் பைபாஸ் ரோட்டின் அருகே நாளை நலத்திட்டம் மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சரான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    பல்வேறு துறைகள் சார்பில், 11 ஆயிரம் பேருக்கு ரூ. 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா நடக்க உள்ள பகுதியில் பிரமாண்ட அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தேனியில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நலத்திட்ட உதவி விழா நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் கூடுதலான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ராக்கார்க், டி.ஐ.ஜி ரூபேஷ் குமார்மீனா, தேனி எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரே உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    கொரோனா தடுப்பூசி முகாம் :-

    தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப் பணிகள் துறை சாா்பில் நாளை (சனிக்கிழமை ) 340 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவா்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அந்த உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருந்தினர் மாளிகை தயார் :-

    தேனி மாவட்டத்திற்கு நாளை தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து தேனி மாவட்டத்தில் முடிவுற்ற வளர்ச்சிப்பணிகளை திறந்து வைத்தும் , புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று இரவு தேனிக்கு வரும் முதலமைச்சர், வைகை அணையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். இதனையடுத்து வைகை அணை விருந்தினர் மாளிகை பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டு
    விருந்தினர் மாளிகைக்கு புதிய வண்ணம் பூசுதல், மாளிகையின் உட்புறம் பழைய விளக்குகளை அகற்றி புது மின்விளக்குகள் பொருத்தப்பட்டும் உள்ளது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமான சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டும் உள்ளது.

    ஆயுள் தண்டனை :-

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது கருநாக்கமுத்தன்பட்டி என்ற கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த இருபத்தி ஏழு வயதாகும் அஜீத் குமார் மற்றும் 20 வயதாகும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் நண்பர்கள். 2016ஆம் ஆண்டு இவர்களுக்குள் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவத்தில் அஜித்குமார் செல்லப்பாண்டியை தாக்கியதால் கூடலூர் காவல் நிலையத்தில் செல்லப்பாண்டி அஜீத்குமார் மீது புகார் அளித்தார்.

    இச்சம்பவத்தால் அஜித் குமாருக்கு செல்லப்பாண்டி மீது கடும் கோபம் ஏற்பட்டு முன்விரோதம் ஆக மாறியது. 2016ஆம் ஆண்டு செல்லப்பாண்டி அஜித்குமார் வீட்டின் வழியாக சென்று கொண்டிருந்தபோது அஜித்குமார் செல்லப்பாண்டியை வழிமறித்து தகராறு செய்து உள்ளார். இதனால் அஜித் குமார் மற்றும் செல்லப்பாண்டிக்கு இடையே தகராறு முற்றியது. இந்த தகராறில் அஜித்குமாரின் தாய், தந்தை, தம்பி ஆகியோரும் சேர்ந்து செல்லப்பாண்டியை தாக்கினர். பிரச்சினை முற்றிய பிறகு அஜித்குமார் செல்லபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் செல்லபாண்டி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக அஜித் குமார் மற்றும் அவரது தந்தை கண்ணன், தாய் ராம தாய் தம்பி வினோத் குமார் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இவ்வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி சாந்திசெழியன் தீர்ப்பு அளித்துள்ளார்.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அஜித்குமார், கண்ணன், தாய் ராமுத்தாய் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த மூவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி